Published : 06 Nov 2024 06:15 AM
Last Updated : 06 Nov 2024 06:15 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.
தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகின்றனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்குச்சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்கை செலுத்தினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்' (வாக்காளர் குழு) நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்த நாட்டில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும். தற்போதைய அதிபர் தேர்தலில் நேற்றிரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணி) வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து மாகாணவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினமே முடிவுகள் தெரியவரக்கூடும். குறிப்பிட்ட மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் இடையிலான வாக்கு சதவீதம் குறைவாக இருந்தால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படக்கூடும்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் தேர்தலுடன் அந்த நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 435 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT