Published : 05 Nov 2024 01:48 PM
Last Updated : 05 Nov 2024 01:48 PM
நியூயார்க்: ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனை ஜோ ரோகன் உடனான பாட்காஸ்ட் உரையாடலில் அவர் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக அமெரிக்க அதிபர் அறியப்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த அதிபர் கமலா ஹாரிஸா அல்லது டொனால்ட் ட்ரம்ப்பா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
தேர்தலில் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில் துறையினரின் ஆதரவு முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் ட்ரம்ப் அதிபரானால் என்ன நடக்கும் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த சூழலில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
“நான் ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கு முன்பு அதில் பதிவாகும் பதிவுகள் தணிக்கை செய்யப்பட்டன. அதுக்கு எனக்கு கவலை அளித்தது. கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை அந்த தளம் மறுத்தது. அனைத்துக்கும் மேலாக டொனால்ட் ட்ரம்ப்பை தடை செய்தது போன்ற காரணங்கள் தான் அந்த தளத்தை நான் வாங்க காரணம். இது அமெரிக்க ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போர்.
‘அமைதியாக இருங்கள்.. வன்முறையில் ஈடுபடாதீர்கள்..’ என்று தான் ட்ரம்ப் தனது பதிவில் சொன்னார். ஆனால், அவர் அந்த தளத்தில் இருந்து தடை செய்யப்பட்டார். அமெரிக்க ஊடகங்கள் ஜனநாயக கட்சியின் குரலாக ஒலிக்கின்றன.” என மஸ்க் இதில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ல் வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டண வசூல் வரையில் அதை சொல்லலாம். ட்விட்டரின் பெயரையும் எக்ஸ் என அவர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT