Published : 05 Nov 2024 10:07 AM
Last Updated : 05 Nov 2024 10:07 AM
பாங்காக்: உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.
கவனம் ஈர்த்த ‘ஹிப்போ’ - மூ டெங் (Moo Deng) என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொரிக்கப்பட்டிருந்தது. அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொரித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அணி மாறும் மாகாணங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ட்ரம்ப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ‘ஹிப்போ ஜோசியம்’ வீடியோ கவனம் பெற்றுள்ளது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க மக்கள் 70 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஏற்கெனவே தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும். எனினும் ஜனவரி 6ஆம் தேதியே அமெரிக்க அதிபர் யார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். ஜனவரி 20 ஆம் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment