Published : 05 Nov 2024 05:33 AM
Last Updated : 05 Nov 2024 05:33 AM

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது: அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் ட்ரம்ப் முன்னிலை

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், மேகன் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வாக்கு சேகரித்தார்.படம்: பிடிஐ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது. அந்த நாட்டின் அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் புவியியல் அமைப்பின்படி கிழக்கு, மத்திய பகுதி, மலைப் பகுதி, பசிபிக் பகுதி என 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி அமெ ரிக்க மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் நிலவுகிறது.

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 10.30 மணி நேரம் வித்தியாசம் உள்ளது. இதன்படி அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி என்றால் இந்தியாவில் மாலை 5.30 மணி ஆகும். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடையும்போது இந்தியாவில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியாக இருக்கும்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 51.9% பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1% பேரும் ஆதரவு அளித்தனர்.

நெவாடாவில் ட்ரம்புக்கு 51.$% பேரும், கமலாவுக்கு 45.9% பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4% பேரும், கமலாவுக்கு 46.8% பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் அயோவா மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்த மாகாணத்தில் இருமுறை ட்ரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் தற்போதைய அதிபர் தேர்தலில் அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா முன்னிலையில் இருக்கிறார். இதுதொடர்பாக டெஸ் மொய்னஸ் ரிஜிஸ்டர் என்ற நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47% பேரும் ட்ரம்புக்கு 44% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்த உடன் அனைத்து மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். பெரும்பாலும் அன்றிரவே புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்படும். இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x