Published : 04 Nov 2024 02:03 AM
Last Updated : 04 Nov 2024 02:03 AM

நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: சிறார்கள் 29 பேருக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு

அபுஜா: நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.

இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அந்நாட்டுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசத் துரோகம், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நைஜீரியாவில் 1970-களில் மரண தண்டனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், 2016 முதல் மரணதண்டனை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் குழந்தைகள் உரிமைப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்று வழக்கறிஞர் அகிந்தயோ பலோகுன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x