Published : 02 Nov 2024 11:05 AM
Last Updated : 02 Nov 2024 11:05 AM
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை பின்னிரவு மற்றும் புதன்கிழமை அன்று ஸ்பெயினில் கனமழை பொழிந்தது. முன்னதாக, அந்த நாட்டின் உயல்வா கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள மக்களுக்கு வானிலை மையம் சார்பில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அன்று அங்கு பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலரைக் காணவில்லை. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வலேன்சியா மாகாணமெங்கும் சேதம் மட்டும் தான் கண்களின் புலப்படுகின்றன என்று மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
சாலைகளில் கார்கள் குவியலாகக் கிடக்கின்றன. இந்த கார் குவியல்களில் யாரேனும் சிக்கியிருக்கலாம், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வலேன்சியாவில் மட்டும் 202 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 8 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பேரழிவை சந்தித்துள்ள வலேன்சியா மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, உணவு இல்லை, மீட்புக் குழுவினர் சென்று சேர்வதற்குக் கூட சில பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வலேன்சியாவில் 80 கிமீ நீளத்துக்கு ரயில்வே பாதை சேதமடைந்துள்ளது. 100 சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்கேஸ் மீட்பு, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளில் 2000 ராணுவ வீரர்கள், 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மக்களை பெருமழை வேறொரு விதமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதற்கிடையில் வலேன்சியா, ஹூல்வா, காஸ்டெலான், மலோர்கா, கேட்டலோனியாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வலேன்சியாவில் மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை சேவைகளை மீட்டெடுக்கவே மீட்புக் குழுவினர் போராடி வருவதாக ஸ்பெயின் நாட்டு செய்தி நிறுவனம் ‘எல் பைஸ்’ தெரிவித்துள்ளது. இதனிடையே தன்னார்வ குழுவினரும் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் சேரும் சகதியுமான வீதிகளை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT