Published : 02 Nov 2024 02:52 AM
Last Updated : 02 Nov 2024 02:52 AM

13 வயது வளர்ப்பு மகள்களை தந்தை திருமணம் செய்யலாம்: ஈரான் சட்டத்துக்கு குவியும் கண்டனங்கள்

தெஹ்ரான்: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஈரான் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலிரேசா ரைசி பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். ஈரானில் ஓராண்டு காலத்தில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கிறது. அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஈரான் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது தத்தெடுத்து வளர்க்கும் பெண் குழந்தை அல்லது முன்னாள் கணவர் மூலம் மனைவி பெற்ற பெண் குழந்தை 13 வயதை எட்டிய பிறகு தந்தை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து ஈரானை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஈரானில் மன்னராட்சி நடைபெற்றபோது பெண்களின் திருமண வயது 18 ஆக இருந்தது. விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் கடந்த 1979-ல் நடைபெற்ற ஈரான் புரட்சிக்குப் பிறகு அனைத்தும் தலைகீழாக மாறின. பெண்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டன.

தற்போது பெண்களின் திருமண வயது 13 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் குறைத்து 9 வயதாக மாற்ற தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களின் திருமண வயது 15 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஈரான் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கமேனி அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா, காசா, மியான்மரில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிராக உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் குரல் எழுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அளித்த பதிலில், “அயத்துல்லா கமேனியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஈரானில் வாழும் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதை அந்த நாடு கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று சுட்டிக் காட்டியது.

இதுகுறித்து இந்திய சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ ஈரானில் வாழும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில் ஈரானில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போது 450-க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவை விமர்சிக்க ஈரானுக்கு எந்த வகையிலும் அருகதை கிடையாது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x