Published : 01 Nov 2024 01:27 PM
Last Updated : 01 Nov 2024 01:27 PM

ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் லா லிகா கிளப்புகள்!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தொழில்முறை கால்பந்தாட்ட கிளப் அணிகளுக்கு இடையிலான தொடரினை ஒருங்கிணைத்து நடத்தும் லா லிகா அமைப்பு மற்றும் அதன் கிளப் அணிகள், அந்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுகிறது.

ஸ்பெயின் நாட்டில் அண்மையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 158 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வலேன்சியா பகுதியில் பாதிப்புகள் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செஞ்சிலுவை சங்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டும் முயற்சியில் லா லிகா மற்றும் அதன் கிளப் அணிகள் களம் கண்டுள்ளன. நிதி திரட்டும் வகையில் போட்டிகள் ஒளிபரப்பாகும் போதும், சமூக வலைதளத்திலும் அது தொடர்பாக பிரச்சாரம் செய்ய லா லிகா முடிவு செய்துள்ளது. ‘இந்த துயரத்தில் ஸ்பெயினின் தொழில்முறை கால்பந்து அமைப்பு இணைகிறது. பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்” என லா லிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்வதாக ரியல் மாட்ரிட் கால்பந்தாட்ட கிளப் அணி தெரிவித்துள்ளது. அதோடு ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்குவதாகவும் அந்த கிளப் அறிவித்துள்ளது. இதை அறிக்கை மூலம் ரியல் மாட்ரிட் உறுதி செய்துள்ளது.

வரும் நாட்களில் நடைபெற உள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மழையால் ரத்தான போட்டிகள் வேறு தினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x