Published : 31 Oct 2024 12:22 PM
Last Updated : 31 Oct 2024 12:22 PM
காபூல்: ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின் முகங்களை காட்டுவதற்கும் தடைவிதிக்கும் அந்நாட்டு அறநெறிச் சட்டங்களில் சமீபத்திய கட்டுப்பாடு இதுவாகும். அங்கு ஏற்கனவே பெண்கள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், பொது இடங்கள், வேலைக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கனின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய நல்லொழுக்கத்துறை அமைச்சர் காலித் ஹனாஃபி கூறியதாவது: ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன்பாக சத்தமாக பிரார்த்தனை செய்யவது தடைசெய்யப்பட்டுள்ளது. ‘தக்பிர்’ (அல்லா ஹு அக்பர்) கோஷம் எழுப்பவும் அனுமதி கிடையாது.
அதேபோல் இஸ்லாமிய நம்பிக்கையின் மையமான ‘சுபானுல்லா’ போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்கக்கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை" இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது கருத்துகள் அமைச்சகத்தின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு தலிபான்கள் நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இவை அனைத்தும் பெண்களுக்கு எதிரானதாக அவர்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணையில்லாமல் செல்லவும் தடைவிதித்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT