Published : 29 Oct 2024 03:28 PM
Last Updated : 29 Oct 2024 03:28 PM
பிரேசிலியா: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு (BRI) திட்டத்தில் இணைய பிரேசில் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரேசில் அதிபர் லுலா டா சில்வா-வின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் செல்சோ அமோரிம் கூறியதாக பிரேசில் செய்தித்தாள் ஓ குலோபோ வெளியிட்டுள்ள செய்தியில், ‘அதிபர் லுலா டா சில்வா தலைமையிலான பிரேசில், பிஆர்ஐ திட்டத்தில் சேராது. அதற்கு பதிலாக சீன முதலீட்டாளர்களுடன் ஒத்துழைக்க மாற்று வழிகளை பிரேசில் தேடும்.
பிஆர்ஐ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், சீனாவுடனான உறவை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல பிரேசில் விரும்புகிறது. சீனர்கள் இதை ‘பெல்ட் அண்ட் ரோடு’ என்று அழைக்கிறார்கள். அவர்கள் விரும்பும் பெயர்களை அவர்கள் கொடுக்கலாம். ஆனால், பிரேசிலுக்கு என்று முன்னுரிமை திட்டங்கள் உள்ளன. அவை சீனாவால் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாமல் போகலாம்” என தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நவம்பர் 20-ம் தேதி பிரேசில் செல்ல உள்ளார். பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் பிரேசிலை இணைக்கச் செய்வதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரேசில் தனது முடிவை அறிவித்துள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணையும் யோசனைக்கு பிரேசிலின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள் சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சீனாவின் முதன்மையான உள்கட்டமைப்பு திட்டமான இதில் சேர்வது, குறுகிய காலத்தில் பிரேசிலுக்கு எந்த உறுதியான பலனையும் தராமல் போவதோடு, அமெரிக்கா உடனான உறவை அது மேலும் கடினமாக்கும்" என கூறியுள்ளனர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இணைய மறுத்த முதல் நாடு இந்தியா. இது தொடர்பாக சீனா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் உள்ளடக்கியதால் இத்திட்டத்துக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், பிரிக்ஸ் கூட்டமைப்பும் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும் வெவ்வேறானவை என்றும் இந்தியா கூறி வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பிரேசிலும் இத்திட்டத்தை ஏற்க மறுத்திருப்பது சீனாவுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment