Published : 29 Oct 2024 11:37 AM
Last Updated : 29 Oct 2024 11:37 AM

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் ‘எக்ஸ்’ கணக்கு முடக்கம்

அயத்துல்லா அலி கமேனி

ஜெருசலேம்: ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் சார்பில் ஹீப்ரு மொழியில் செய்தி வெளியிட்டு வந்த புதியக் கணக்கை சமூக வலைதளமான எக்ஸ் முடக்கியுள்ளது. எக்ஸ்-ன் விதிகளை மீறியதால் இந்தக் கணக்கு முடக்கப்படுகிறது என்ற குறிப்புடன் திங்கள்கிழமை அக்கணக்கு முடக்கப்பட்டது. என்றாலும் விதிமீறல் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடந்த வார இறுதியில் ஈரான் மீது இஸ்ரேல் வெளிப்படையான தாக்குதல் நடத்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை கமேனி ஆற்றிய உரையொன்றில், “கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தின. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானில் பேரழிவு ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இது உண்மை கிடையாது.

ஈரானில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதேநேரம் இஸ்ரேலின் தாக்குதலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் ஈரான் குறித்து தப்புக் கணக்கு போட்டு வருகின்றனர். ஈரானின் வலிமையை எதிரிக்கு (இஸ்ரேல்) புரிய வைக்க வேண்டும். இதை செய்ய வேண்டியது ஈரான் அரசின் கடமை ஆகும்” என்று தெரிவித்திருந்தார்.

முடக்கப்பட்ட எக்ஸ் கணக்கு வழக்கமான இஸ்லாமிய வாழ்த்தான ‘கருணை மிக்க கடவுளின் பெயரால்’ என்ற வாழ்த்துடன் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கமேனியின் அலுவலகம் 85 வயதான மூத்த மதத் தலைவருக்காக பல ஆண்டுகளாக பல எக்ஸ் கணக்குகளை கையாண்டு வருகிறது, பல்வேறு மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்த கணக்கின் இரண்டாவது பதிவு அயத்துல்லா கமேனி ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தது. அதில் "கடந்த கால ஆட்சியாளர்களின் தவறால் சில மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அந்த தவறுகளை திருத்தி துணிச்சலாக முன்னேறி செல்ல வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, ஆயுத உற்பத்தியில் ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்காவும், உலக நாடுகளும் இஸ்ரேலை கண்டிக்க மறுக்கின்றன. காசா, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது. போர் விதிகளை மீறி செயல்பட்டு வருகிறது. அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அயத்துல்லா கமேனியின் சமூக வலைதள பதிவு முடக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இஸ்ரேலுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்.7-ம் தேதி ஹமாஸ்கள் நடத்திய தாக்குதலுக்கு கமேனி ஆதரவு அளித்ததற்காக மெட்டா நிறுவனம் கமேனியின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை முடக்கியது.

சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் எக்ஸ் ஈரானில் பல ஆண்டுகளாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்த ஈரானியர்கள் வெர்ச்சுவல் தனியார் நெட்ஒர்க்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x