Published : 28 Oct 2024 09:27 AM
Last Updated : 28 Oct 2024 09:27 AM
கெய்ரோ: காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார்.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது.
எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துவதுடன் ஹமாஸின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் இதுவரை 42,924 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 100,833 காயமடைந்துள்ளனர். இவர்களில் கை, கால் போன்ற உடல் உறுப்புகளை இழந்தோரும் அடங்குவர். இந்நிலையில், காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எகிப்து, கத்தார், அமெரிக்கா சேர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையை கடந்த ஓராண்டாகவே முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் எகிப்து அதிபர் அப்தல் ஃபதா அல் சிஸி ஞாய்ற்றுக் கிழமை பேசுகையில், “காசாவில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள முன்மொழிகிறேன். இந்த இரண்டு நாட்களில் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் 4 பேரை விடுவிக்கலாம். அதைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு மேலும் சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.” என்றார்.
ஆனால் இது குறித்து அதிபர் அப்தல் ஃபதா அல் சிஸி முறைப்படி இஸ்ரேல் அரசிடமோ அல்லது ஹமாஸ் தரப்பிடமோ பேசிவிட்டாரா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும் அவரின் அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழம காசாவில் 53 பேரும், லெபனானில் 21 பேரும் கொல்லப்பட்ட நிலையில் எகிப்து அதிபரின் இந்த அறைகூவல் கவனம் பெறுகிறது.
ஒரே நாளில் இஸ்ரேல் காசா, லெபனானில் நடத்திய தாக்குதலுக்கு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வடக்கு காசாவில் நாளுக்கு நாள் மரணங்களும், காயங்களும், அழிவுகளும் அதிகரித்துவருவதாக அவர் வருத்தம் தெரிவித்த சூழலில் தான் இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் எகிப்து அதிபர்.
இஸ்ரேல் தனது தாக்குதலை காசாவில் தொடங்கி, லெபனான், ஈரான் என விஸ்தரித்துக் கொண்டே செல்வது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT