Published : 26 Oct 2024 08:51 AM
Last Updated : 26 Oct 2024 08:51 AM

ஈரான் மீது ராணுவ தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - போர் பதற்றம் அதிகரிப்பு

பிரதிநிதித்துவப் படம்

டெல் அவிவ்: ஈரானின் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் உள்ள அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். ஈரானிய மண்ணில் இருந்தும் நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் LTG ஹெர்சி ஹலேவி, இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் டோமர் பாருடன் இணைந்து கேம்ப் ராபினில் உள்ள இஸ்ரேலிய விமானப்படையின் நிலத்துக்குக் கீழ் உள்ள கட்டளை மையத்தில் இருந்து ஈரான் மீதான தாக்குதல்களுக்கான உத்தரவுகளை வழங்கி வருகிறார்.

ஈரான் தலைநகரான தெஹ்ரானில், வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து ஒலிகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளன. எனினும், ஈரானில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.

இதனிடையே, ஈரானில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈராக்கும் அனைத்து விமான நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x