Published : 26 Oct 2024 01:17 AM
Last Updated : 26 Oct 2024 01:17 AM

பின்லேடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தீவிரவாத மையங்கள்: புதிய தகவல்கள் வெளியீடு

அபோதாபாத்: பாகிஸ்தானில் நீண்ட காலமாக தீவிரவாதி ஒசாமா பின் லேடன் மறைந்து வாழ்ந்து வந்த அபோதாபாத்தில் தற்போது தீவிரவாத மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த 3 அமைப்புகள் இணைந்து அபோதாபாத்தில், புதிய தீவிரவாதிகள் பயிற்சி மையங்களை உருவாக்கியுள்ளது. இது புலனாய்வு அமைப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழு ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த தீவிரவாத மையங்கள் அமைந்துள்ள பகுதியையொட்டி, பாகிஸ்தான் ராணுவ முகாமின் கதவு உள்ளதால், வெளியில் இருந்து தீவிரவாத பயிற்சி மையத்தை ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எளிதில் அணுக முடியாது என்று தெரியவந்துள்ளது. எனவே, தீவிரவாத முகாம்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் புலானாய்வுத் துறையான ஐ.எஸ்.ஐ.யின் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் அந்த முகாமின் மேற்பார்வையாளராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாதிகள் பயிற்சி முகாமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், தாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகிலுள்ள அபோதாபாத்தில்தான் பின்லேடன் பாதுகாப்பான ஒரு வீட்டை அமைத்து செயல்பட்டு வந்தார். அப்போது அபோதாபாத்துக்கு வந்த அமெரிக்க ராணுவம் அதிரடியாக செயல்பட்டு பின்லேடன் கும்பலை சுட்டுக் கொன்றது.

இந்நிலையில், பின்லேடன் மறைந்து வசித்து வந்த இடத்தை 2012-ல் பாகிஸ்தான் அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இந்நிலையில் தற்போது அபோதாபாத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத பயிற்சி மையமானது, பின்லேடன் வாழ்ந்து வந்த வீட்டின் இடிபாட்டுக்கு மேல் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த முகாம் ஹபீஸ் சயீத் (லஷ்கர்-இ-தொய்பா), சயத் சலாஹுதீன் (ஹிஸ்புல் முஜாகிதீன்), மசூத் அசார் (ஜெய்ஷ் இ முகமது) ஆகியோரால் மிகப்பெரிய அளவில் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளனர். இந்த முகாமின் முக்கிய நோக்கம் 3 தீவிரவாத அமைப்புகளுக்கும் ஆட்களை சேர்ப்பதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் அபோதாபாத்தில் தீவிரவாத பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் தகவல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x