Published : 25 Oct 2024 02:50 AM
Last Updated : 25 Oct 2024 02:50 AM

சென்னை-ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம்: ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: சென்னை- ரஷ்யா கடல் வழித்தட திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் பங்கேற்கலாம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த 22-ம் தேதி பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாளில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். 2-வது நாளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு டெல்லி திரும்பினார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாளான நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: உலகம் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சில பழைய விவகாரங்கள் தற்போது பெரும் பிரச்சினைகளாக உருவெடுத்து உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டியது அவசியம். இது போருக்கான காலம் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் இதே கருத்தை எடுத்துரைத்தார். இதை உலக நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேற்கு ஆசியாவில் தற்போது நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது. அங்கு பதற்றம் அதிகரித்தால் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

இறுதிநாள் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “அமெரிக்காவின் டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் சார்பில் புதிய பணப் பரிமாற்றத்தை உருவாக்க வேண்டும். குளோபல் சவுத், குளோபல் ஈஸ்ட் நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். வடக்கு கடல் வழி மற்றும் வடக்கு- தெற்கு சர்வதேச போக்குவரத்து திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் இணையலாம்" என்று தெரிவித்தார்.

சென்னை-ரஷ்யா கடல் வழித்தடம்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் சர்வதேச கடல்வழி சரக்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தீர்வு காண ஆர்டிக் கடல் சார்ந்த வடக்கு கடல் வழித் திட்டத்துக்கு ரஷ்யா முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் சென்னை, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரங்களை இணைக்கும் கடல் வழித்திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டு உள்ளன. புதிய கடல் வழி திட்டம் தொடர்பாக டெல்லியில் அண்மையில் இந்திய, ரஷ்ய உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்டிக் கடல் பகுதியில் பனிக்கட்டிகளை உடைத்து செல்லும் சரக்கு கப்பல்களை வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி ரஷ்ய அரசு நிறுவனமான ரோசோடோமுக்காக இந்தியாவில் 4 அதிநவீன கப்பல்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.6,000 கோடி ஆகும். மேலும் ஆர்டிக் கடல் பகுதியில் சரக்கு கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கவும் ரஷ்யா உறுதி அளித்தது.

இந்த சூழலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது வடக்கு கடல் வழி திட்டத்தில் விருப்பமுள்ள நாடுகள் இணையலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x