Published : 24 Oct 2024 04:05 AM
Last Updated : 24 Oct 2024 04:05 AM

பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம்; போரை அல்ல! - ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திட்டவட்டம்

ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினர்.படம்: பிடிஐ

மாஸ்கோ: 'பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் இந்தியா ஆதரிக்கும், போரை ஆதரிக்காது' என்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ரஷ்யாவின் கசான் நகருக்கு சென்றார். அன்று மாலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறுகிறது. வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு பிரிவினைகள் குறித்து உலக நாடுகள் விவாதித்து வருகின்றன. ஆனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது, உணவு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் குடிநீர் ஆகிய வசதிகளை உறுதி செய்வதற்குத்தான் நாம் இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு பிரிவினையை ஏற்படுத்தவில்லை என்பதை உலகத்துக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும். ராஜ தந்திரத்தையும் பேச்சுவார்த்தையையும் நாங்கள் ஆதரிக்கிறோம், போரை ஆதரிக்கவில்லை என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும். கரோனா பெருந்தொற்றில் இருந்து விடுபட பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு இணைந்து செயல்பட்டதோ அதுபோல பாதுகாப்பான, வலிமையான மற்றும் வளமான எதிர்காலத்தை நாம் உருவாக்குவதற்கும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில், பன்னாட்டு வளர்ச்சி வங்கிகள், உலக வரத்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இப்போதைய சூழலுக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிக்ஸ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தமைக்கும் இந்த அமைப்புக்கு தலைமை வகிப்பதற்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு நடுவே, பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “கசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினேன். இந்தியா, சீனா இடையிலான உறவு இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, பிராந்திய மற்றும் உலக அமைதி, நிலைத்தன்மைக்கும் மிகவும் அவசியம். எல்லையில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவிய பிரச்சினைக்கு உடன்பாடு எட்டப்பட்டது வரவேற்கத்தக்கது. எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜி ஜின்பிங் கூறும் போது, “கசான் நகரில் உங்களை (மோடி) சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நம்முடைய சந்திப்பை நம் இரு நாட்டு மக்கள் மட்டுமல்லாது சர்வதேச சமுதாயமும் உன்னிப்பாக கவனிக்கிறது. நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள வேண்டியது அவசியம். இரு நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x