Published : 23 Oct 2024 02:49 PM
Last Updated : 23 Oct 2024 02:49 PM

அரசு கணினிகளில் வாட்ஸ்அப், கூகுள் டிரைவ் பயன்படுத்த ஹாங்காங் தடை

ஹாங் காங்: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அரசு கணினிகளில் வாட்ஸ்அப், கூகுள் டிரைவ், வீ-சாட் போன்றவற்றை ஊழியர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது ஹாங்காங் அரசு.

அரசின் இந்தத் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வழிகாட்டுதலின் டிஜிட்டல் கொள்கையால் ஊழியர்கள் பெரிய அளவில் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். இருப்பினும் வாட்ஸ்அப், கூகுள் டிரைவ், வீ-சாத் போன்ற சேவைகளை ஊழியர்கள் தங்களது சொந்த சாதனத்தில் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தடையில் இருந்து விலக்கு வேண்டும் என கோருபவர்கள் உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு மற்றும் தகவல் கசிவு போன்ற காரணங்களால் உலக அளவில் தனியார் நிறுவனங்கள் கூட இதே மாதிரியான நடவடிக்கையை கையாண்டு வருவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக்கிங் விவகாரம் உலக அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. குறிப்பிட்ட தளங்களின் பயன்பாட்டை அரசு எந்திரங்களில் பயன்படுத்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. இது தகவல் கசிவினை தடுக்கும். அரசு ஊழியர்களிடம் போதுமான சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாததும், முறையான கண்காணிப்பு அமைப்புகள் இல்லாததும் இதற்கு காரணம் என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹாங்காங் அரசின் பல துறைகளின் வசம் இருந்து லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவு சார்ந்த விவரங்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் அந்த அரசு வாட்ஸ்அப், கூகுள் டிரைவ் போன்றவற்றை அரசு கணினிகளில் பயன்படுத்த தற்போது தடை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x