Published : 22 Oct 2024 04:05 AM
Last Updated : 22 Oct 2024 04:05 AM
வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை நடுவானில் இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ‘தாட்’ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீதுகடந்த 1-ம் தேதி 180-க்கும் மேற்பட்ட சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசியது. இவற்றை இஸ்ரேலின் அயர்ன் டோம் தடுப்பு ஏவுகணைகளால் அழிக்க முடியவில்லை. இதனால் அமெரிக்க தயாரிப்பான ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவ தாட் வான் தடுப்பு ஏவுகணை கருவிகள் மற்றும் அவற்றை இயக்க 100 அமெரிக்க வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல் எப்போது, எப்படி தாக்குதல் நடத்தும் என்ற புரிதல் எனக்கு உள்ளது. இருவரும் மாறி மாறி தாக்கிகொள்வதை நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
உக்ரைன் செல்லும் முன் பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின் லாய்ட், அமெரிக்காவின் நவீன ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் இஸ்ரேலுக்கு அனுப்பி தயார் நிலையில் வைத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் எப்படி தாக்குதல் நடத்தும் எனத் தெரியவில்லை. அது இஸ்ரேலின் முடிவு. இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை குறைக்க நாங்கள் தொடர்ந்து அனைத்தையும் செய்வோம்’’ என்றார்.
மத்திய கிழக்கு பகுதியில் போரை விரிவுபடுத்துவதை இஸ்ரேல் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஈரானின் அணு சக்தி இடங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT