Published : 22 Oct 2024 04:00 AM
Last Updated : 22 Oct 2024 04:00 AM

இந்தியாவின் உதவியுடன் மாலத்தீவில் யுபிஐ பண பரிவர்த்தனை அறிமுகம்

மாலி: இந்தியா உருவாக்கிய யுபிஐ கட்டமைப்பை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.

நாட்டின் அன்றாட பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை எளிமையாக்கும் நோக்கில் இந்திய அரசு யுபிஐ கட்டமைப்பை உருவாக்கியது. 2016-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப் பரிவர்த்தனை நடைமுறையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை, சாலையோர கடைகள் வரை பிரதானமாக யுபிஐ மூலமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதுவரை, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்தியஅரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், யுபிஐ தொடர்பாக இந்தியா - மாலத்தீவு இடையே கடந்த ஆகஸ்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாலத்தீவில் யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்கும் பணியை‘ட்ரேட்நெட் மாலத்தீவு கார்ப்பரேஷன்’ நிறுவனம் மேற்கொள்கிறது. மாலத்தீவு வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், ஃபின்டெக் நிறுவனங்கள் ஆகியவை பங்களிப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் முய்சு கேட்டுக்கொண்டுள்ளார்.

மாலத்தீவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நாட்டு ஜிடிபியில் சுற்றுலா துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், யுபிஐ அறிமுகம் மூலம் அந்நாட்டின் பணப் பரிவர்த்தனை செயல்பாடு அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாலத்தீவு அரசுவெளியிட்ட செய்தியில், ‘மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் யுபிஐ குறிப்பிடத்தக்க பங்களிப்புவழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய நிதி கட்டமைப்பு, விரைவான பணப் பரிவர்த்தனை, வலுவான டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இதன்மூலம் சாத்தியமாகும் என நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளங்களில் இந்தியாவின் யுபிஐ முன்னணி வகிக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மொத்த பணப் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. யுபிஐ மூலம் விநாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x