Last Updated : 01 Jun, 2018 08:43 AM

 

Published : 01 Jun 2018 08:43 AM
Last Updated : 01 Jun 2018 08:43 AM

முன்னாள் அதிபர் ஒபாமா உதவியாளர் பற்றி நிறவெறி கருத்து வெளியிட்ட நடிகையின் டிவி நிகழ்ச்சி ரத்து

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் உதவியாளர் பற்றி நிறவெறி கருத்து வெளியிட்ட பிரபல நடிகையின் டிவி நிகழ்ச்சியை ஏபிசி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் பல தொடர்களை வெளியிட்டு வருகிறது. அவற்றில் ‘ரோசன்னி’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. ஏற்கெனவே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியை மறுபடியும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏபிசி நிறுவனம் ஒளிபரப்பத் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியை ரோசன்னி பார் என்ற தொலைக்காட்சி நட்சத்திரம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி அமெரிக்க தொலைக்காட்சிகளிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக முதலிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் உதவியாளர் வேலரி ஜேரட், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைனான்சியர் ஜார்ஜ் சோரோஸ், முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மகள் செல்சியா கிளின்டன் ஆகியோரைப் பற்றி ட்விட்டரில் தரக்குறைவாக பதிவுகள் வெளியிட்டார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒபாமாவின் உதவியாளர் வேலரி ஜேரட் பற்றி நிறவெறியை தூண்டும் வகையில் ரோசன்னி பார் ட்விட்டரில் கருத்து வெளியிட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து ரோசன்னி பார் வழங்கி வந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ஏபிசி நிறுவனம் அறிவித்தது. இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘‘ரோசன்னி ட்விட்டரில் வெளியிட்ட கருத்துகள் வெறுக்கத்தக்க வகையில் உள்ளன. எங்கள் நிறுவனம் பின்பற்றி வரும் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் அவரது ட்விட்டர் பதிவுகள் இல்லை. இதனால் அவருடைய நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம்’’ என்று கூறியுள்ளது.

மேலும் வேலரி ஜேரட்டிடம் ஏபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்நிலையில், ‘‘எனக்காக யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டாம். நான் மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன். ட்விட்டரில் அந்தப் பதிவை வெளியிடும் போது அதிகாலை 2 மணி. தூக்க மாத்திரை சாப்பிட்ட பிறகு ட்விட் செய்து கொண்டிருந்தேன்’’ என்று ரோசன்னி தெரிவித்துள்ளார்.

மேலும் ரோசன்னி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் சிலருக்கு வேலையும் போய்விட்டது. அதற்காகவும் ட்விட்டரில் ரோசன்னி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரோசன்னி இருந்துள்ளார். தற்போது ரோசன்னி நிறவெறி கருத்து வெளியிட்டது பற்றி அதிபர் ட்ரம்ப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ‘‘வேலரி ஜேரட்டிடம் மன்னிப்பு கேட்ட ஏபிசி நிறுவனம், தொடர்ந்து என்னைப் பற்றி பல கருத்துகளை வெளியிட்டு வருவதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவில்லை’’ என்று நேற்று ட்விட்டரில் ட்ரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x