Published : 19 Oct 2024 04:46 AM
Last Updated : 19 Oct 2024 04:46 AM

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியாவின் கடைசி நிமிட வீடியோ வெளியீடு

காசா: ஹமாஸ் பிரிவு தலைவர் யாஹியா சின்வர் தங்கியிருந்த கட்டிடம் தாக்கப்பட்டபோது எடுத்த ட்ரோன் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது. அதில் ட்ரோன் மீது மரக்கட்டை எடுத்து யாஹியா சின்வர் வீசி எறியும் காட்சி பதிவாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் நடந்த ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மக்கள் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் (62) மட்டும் இஸ்ரேல் ராணுவத்திடம் இருந்து தொடர்ந்து தப்பி வந்தார். மக்களோடு மக்களாக அவர் கலந்திருந்ததால், அவர் பிடிபடவில்லை. அவரை உயிரோடு அல்லது பிணமாக மீட்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் சபதம் செய்திருந்தது.

இடிபாடுகளுக்கு இடையே சோபாவில் அமர்ந்து உள்ளார் யாஹியா சின்வர். இந்நிலையில் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த புதன்கிழமை வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கட்டிடம் அருகே சென்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதையடுத்து அந்த கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவ டேங்க் குண்டு வீசி தகர்த்தது. அதன்பின் அந்த கட்டிடத்துக்குள் யாரும் இருக்கிறார்களா என்பதை அறிய ட்ரோன் கேமரா பறக்கவிடப்பட்டது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஷோபா ஒன்றில் ஒரு வயதான நபர் தனது முகத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தார். அவர் அருகே ட்ரோன் கேமரா பறந்து வந்தபோது, அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து ட்ரோன் மீது வீசும் காட்சி பதிவாகியது.

இதையடுத்து அந்த கட்டிடத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த நபர் இறந்தார். அவர் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் என்பது பயோமெட்ரிக் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. ட்ரோன் கேமரா மீது யாஹியா சின்வர் கட்டையை தூக்கி வீசும் வீடியோவை சமூக ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், ‘‘இஸ்ரேல் வரலாற்றில் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற மோசமான தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் சின்வர். இவர் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்று தோல்வியடைந்தார்’’ என்றார்.

புதிய தலைவர் நியமனம்: இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டார். அவர் அளித்த பேட்டியில், ‘‘உயிர்த் தியாகம் செய்த யாஹியா சின்வர் தனது கொள்கையில் உறுதியானவர், தைரியமானவர். நமது விடுதலைக்காக அவர் உயிர்த்தியாகம் செய்துள்ளார். அவர் தனது முடிவை தைரியத்துடன் சந்தித்தார். கடைசி மூச்சுவரை அவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கை முழுவதையும் போராளியாகவே வாழ்ந்துள்ளார்’’ என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x