Published : 18 Oct 2024 06:53 PM
Last Updated : 18 Oct 2024 06:53 PM
டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று ஹமாஸ் உறுதிபூண்டுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அதன்பின், தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது.
காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) ஹமாஸ் இயக்கத்தின் மூன்று முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவர். இதை இன்று காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் ஹய்யா உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, ஜூலை மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறு ஹமாஸின் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டிருந்தாலும், ‘காசா போர் இன்னும் முடிவடையவில்லை’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் இன்னும் போர் பதற்றததை அதிகரிக்கச் செய்துள்ளது. காசாவில், அக்டோபர் 7, 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 42,438 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 99,246 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதல்களில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். தெற்கு லெபனானில் நடந்த மோதலில் ஐந்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலுடனான போர் புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒரு தொலைக்காட்சி உரையில் பேசும்போது, “மறைந்த யஹ்யா சின்வர் உறுதியான, தைரியமான வீரர். சின்வர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு புனித போராளியாகவே வாழ்ந்துள்ளார். நமது விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். சின்வரின் மரணம் நமது குழுவை இன்னும் பலப்படுத்தும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும் வரை மற்றும் முற்றுகையிடப்பட்ட பகுதியில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறும் வரை காசாவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT