Published : 16 Oct 2024 12:06 PM
Last Updated : 16 Oct 2024 12:06 PM

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ஜெய்சங்கரை உற்சாகமாக வரவேற்ற ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த உச்சிமாநாட்டில் எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டை ஒட்டி ஷெபாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடிக்கு பதிலாக ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

இதற்காக நேற்று இஸ்லாமாபாத் சென்ற ஜெய்சங்கரை, விமான நிலையத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை இக்குநர் ஜெனரல் (தெற்காசியா) இலியாஸ் மெகமூத் நிஜாமி வரவேற்றார். மேலும், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் பாரம்பரிய உடை அணிந்து ஜெய்சங்கருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனையடுத்து, விருந்தினர்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் கொடுத்த இரவு விருந்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது ஷெபாஸ் ஷெரீப், ஜெய்சங்கரை கைகுலுக்கு உற்சாகமாக வரவேற்றார்.

இரண்டாவது நாளான இன்று, மாநாடு நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த ஜெய்சங்கரை, ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். அப்போது, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டனர்.

இந்த மாநாட்டில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு அம்சங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். 2016, ஆகஸ்ட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றார். அதன் பிறகு, எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கடைசியாக 2015 டிசம்பரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தானுக்குச் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x