Published : 12 Oct 2024 11:28 AM
Last Updated : 12 Oct 2024 11:28 AM
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம் தான் உலகின் மிகவும் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது. பல கொடிய விஷம் மிகுந்த ஊர்வன உயிரினங்களைக் கொண்டது இப்பாலைவனம். சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிதினும் அரிது. அந்த வகையில் அண்மையில் அங்கு பெய்த திடீர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த திடீர் கனமழையால் சஹாரா பாலைவனத்தில் உள்ள இரிக்கி என்ற வறண்ட ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இந்த வறண்ட சஹாராவில் ஜகோரா - டாடா மணல் படுக்கைகளுக்கு இடையே உள்ளது. இந்நிலையில் திடீர் மழை வெள்ளத்தால் நிரம்பிய இரிக்கி ஏரியின் காட்சிகள் கொண்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இது குறித்து மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் அளித்த ஊடகப் பேட்டியில், “குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய மழைப்பொழிவு பதிவாகி 30 முதல் 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 100 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், “வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதியின் வானிலையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இப்பகுதியில் நிலவும் காற்றில் வழக்கத்தைவிட அதிகமாக ஈரப்பதம் இருப்பதால் இது மேலும் நீர் ஆவியாவதை ஊக்குவித்து மேலும் சில புயல்களை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பாலைவனத்தில் ஆங்காங்கே இருக்கும் ஈச்ச மரங்களை சூழ்ந்துள்ள மழை வெள்ளக் காட்சி அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இந்தப் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT