Published : 11 Oct 2024 04:31 PM
Last Updated : 11 Oct 2024 04:31 PM

லாவோஸ் பிரதமர் சிபன்டோனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை - முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

வியன்டியான்: இந்தியா - லாவோஸ் இடையே பாதுகாப்பு, ஒலிபரப்பு, சுங்க ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகி உள்ளன.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: லாவோவின் வியன்டியான் நகரில் அந்நாட்டுப் பிரதமர் சோனெக்சே சிபன்டோனுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 21-வது ஆசியான்-இந்தியா மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியதற்காக லாவோ பிரதமருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா-லாவோஸ் நாகரீகத்தையும் சமகால உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு பிரதமர்களும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர். வளர்ச்சிக் கூட்டாண்மை, திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாரம்பரிய மீட்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

யாகி புயலுக்குப் பின், லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுக்கு வெள்ள நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியதற்காக பிரதமருக்கு, சிபன்டோன் நன்றி தெரிவித்தார். இந்திய தொல்லியல் துறை உதவி மூலம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமான வாட் பூவில் மறுசீரமைப்பும் பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்று வருவது இருதரப்பு உறவுகளுக்கு சிறப்பு பரிமாணத்தை அளிக்கிறது என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

பிராந்திய மற்றும் பலதரப்பு அமைப்புகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் சிபன்டோன் வலியுறுத்தினார். 2024-ம் ஆண்டுக்கான ஆசியான் அமைப்புக்கு லாவோ ஜனநாயக குடியரசு தலைமை தாங்குவதை இந்தியா வலுவாக ஆதரித்தது என்றும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு, ஒலிபரப்பு, சுங்க ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்பாடுகள் மற்றும் மேகாங்-கங்கா ஒத்துழைப்பின் கீழ் மூன்று விரைவான தாக்க திட்டங்கள் இரு தலைவர்களின் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

லாவோ ராமாயணத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், ராமாயணம் தொடர்பான சுவரோவியங்களுடன் வாட் பக்கியா புத்த கோயிலை மீட்டெடுத்தல், சம்பாசக் மாகாணத்தில் ராமாயணம் குறித்த நிழல் பொம்மலாட்ட அரங்கிற்கு ஆதரவு ஆகியவை விரைவான தாக்க திட்டங்கள் தொடர்புடையவை. இந்த மூன்று திட்டங்ககளும் தலா 50,000 அமெரிக்க டாலர் இந்திய அரசு மானிய உதவியைக் கொண்டுள்ளன.

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மானிய உதவியையும் இந்தியா வழங்கும். ஐக்கிய நாடுகள் சபை மேம்பாட்டு கூட்டாண்மை நிதியத்தின் மூலம் இந்த உதவி வழங்கப்படும். இது தென்கிழக்கு ஆசியாவில் இந்த நிதியத்தின் முதலாவது திட்டமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x