Published : 11 Oct 2024 05:07 AM
Last Updated : 11 Oct 2024 05:07 AM
வியன்டியேன்: உலகில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்புறவு மிக முக்கியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ‘ஆசியான்’ என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அதேபோல, கிழக்கு ஆசியா அமைப்பில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 அமைப்புகளின் உச்சி மாநாடுகள் லாவோஸ் நாட்டின் தலைமையில் அந்நாட்டின் தலைநகர் வியன்டியேனில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபன்டோன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ளார்.
லாவோஸ் புறப்பட்டு செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘‘கிழக்கு ஆசிய கொள்கையை உருவாக்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன்மூலம் நமதுநாடு கணிசமான பலன்களை பெற்றுள்ளது. எதிர்காலத்தில் முழு ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆசியான் தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஏற்பட சவால்களாக உள்ள விஷயங்கள் குறித்து கிழக்கு ஆசியா மாநாட்டில் ஆலோசிக்க சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. புத்த - ராமாயண பாரம்பரியத்தை பகிர்ந்துள்ள லாவோஸ் நாட்டுடன் இந்தியா கலாச்சார மற்றும் நாகரிக தொடர்புகளை பகிர்ந்துள்ளது. லாவோஸ் தலைவர்களை சந்திப்பதன் மூலம் இருதரப்பு உறவுகள் வலுவடையும். இந்த சந்திப்பில் பல நாட்டு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்’’ என்றார்.
இந்நிலையில், லாவோஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை தலைநகர் வியன்டியேனில் அந்நாட்டுஉள்துறை அமைச்சர் விலய்வோங் பெளத்தகாம் வரவேற்றார்.
இந்தியாவில் இருந்து புத்த மதத்தினர் மூலம் லாவோஸ் நாட்டுக்கு சென்ற ராமாயண காவியம், அங்கு‘பாலக் பலம்’ அல்லது ‘ப்ரா லக்ப்ரா ராம்’ என அழைக்கப்படுகிறது. இது இரு நாடுகள் இடையேயான கலாச்சார உறவை பிரதிபலிக்கிறது. இந்த சூழலில், லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் ராமாயணத்தை பார்வையிட்டார். அங்கு உள்ள ராயல் தியேட்டர் குழுவினர் ராமாயணத்தை பிரதமர் மோடிக்கு நடித்துக் காட்டினர்.
புத்த மத தலைவர்களிடம் ஆசி: லாவோஸ் தலைநகர் வியன்டியேனில் உள்ள சி சாக்கெட் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபட்டார். அங்கு புத்த மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா - ஆசியான் அமைப்பின் 21-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கிழக்கு ஆசிய கொள்கையை 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். அது இந்தியா - ஆசியான் நாடுகள்இடையே புதிய சக்தி, உத்வேகம் மற்றும் வரலாற்று உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - ஆசியான் நாடுகள் இடையே வர்த்தகம் 2 மடங்காக அதிகரித்து 130 பில்லியன் டாலரைதாண்டியுள்ளது. 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நூற்றாண்டு. போரையும், பதற்றத்தையும் உலகம் சந்தித்து வரும் சூழலில், இந்தியா - ஆசியான் நாடுகளின் நட்பு, ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மிக முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment