Published : 07 Oct 2024 09:16 AM
Last Updated : 07 Oct 2024 09:16 AM
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடந்து இன்றுடன் (அக்.07) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் லெபனான் எல்லையில் இருக்கும் இஸ்ரேல் ராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்வையிட்டார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ”வடக்கு எல்லையில் இருக்கும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர்கள் தொலைவில் எல்லைக் கோட்டுக்கு அப்பால், அவர்களின் நண்பர்கள், ஹிஸ்புல்லா அமைப்பினர் எங்களுடைய முகாம்களை தாக்குவதற்காக தயார் செய்த உள்கட்டமைப்புகளை தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள்தான் வெற்றி நாயகர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களான இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களும், காசாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள்.
ஓராண்டுக்கு முன்பு நாம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளானோம். கடந்த 12 மாதங்களில் நாம் எதார்த்தத்தை முழுமையாக மாற்றியிருக்கிறோம். நமது எதிரிகளின் மீது நீங்கள் கட்டவிழ்க்கும் தாக்குதலைக் கண்டு ஒட்டுமொத்த உலகமும் சிரிக்கிறது. உங்களுக்கு என்னுடைய வீரவணக்கம். வெற்றியின் தலைமுறையினர் நீங்கள் என்பதை நான் உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன். ஒன்றிணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? - பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் இயக்கத்தினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களும், ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT