Last Updated : 07 Oct, 2024 08:03 AM

36  

Published : 07 Oct 2024 08:03 AM
Last Updated : 07 Oct 2024 08:03 AM

யுத்தம் இல்லாத பூமி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு அறிவுறுத்தப் போவது யார்?

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்து போன கட்டிடங்கள். (கோப்பு படம்)

இன்று காலை பரபரப்புடனேயே விடிகிறது. உலகமே இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்கள் பக்கமும், ஈரானும் அதன் எதிர்ப்பின் அச்சு (Axis of Resistance) ஒரு பக்கமுமாக நின்று இன்றைய தினத்தின் விடியலைப் பரபரப்புடனேயே எதிர்கொள்கிறது.

காரணம், சென்ற வருடம் இதே நாளில் இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல். அதன் விளைவாக உலகமே இரு துருவங்களாகி கடந்த ஒரு வருடத்தை மானுடத்தின் துயர்மிகு காலமாகக் கடந்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான நில உரிமைத் தகராறு உலகளவில் பேருருவம் எடுத்திருப்பதன் காரணம் இரு தரப்பும் அவரவர் உரிமையை விட்டுக் கொடுக்காததும், ஒருவரின் இருப்பை மற்றவர் மறுப்பதும்தான். இதன் மூலகாரணங்களை ஏற்கெனவே நாம் இந்து தமிழில் தொடராக வெளிவந்த பா ராகவனின் “ஏவுகணைக் காலம்” என்ற கட்டுரையில் வாசித்திருக்கிறோம்.

இப்போது அந்தத் தொடரை மீள்வாசிப்பு செய்ய வேண்டியதன் கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம், இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புதான்.

1948-ல் சிறிய அளவில் ஐக்கியநாடுகள் மற்றும் மேலை நாடுகளின் உதவியுடன் மேற்கு ஆசியாவில்தனது பூர்வாசிரமான ஜெருசலத்தை மையமாகக் கொண்டு இடம் பிடித்தஇஸ்ரேல், இன்று எந்தளவில் நில ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதை அந்த நாடு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய நில ஆக்கிரமிப்பு மற்றும் எல்லை விரிவாக்கம் மூலம் அறியலாம்.

இவ்வாறாகத் தொடர் நில ஆக்கிரமிப்பு மற்றும் எல்லை விரிவாக்கம் காரணமாக விரிவடைந்த இஸ்ரேலின் ஏதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக ஈரானில் ஊக்குவிக்கப்பட்டதே “எதிர்ப்பின் அச்சு“ (Axis of Resistance) என்று அமைக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, மற்றும் ஹஸத் அல் ஷபி.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் யூதர்களின் தாயகமாகத் தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு மதரீதியான எதிர்ப்பை அண்டை அரபுநாடுகள் தெரிவித்தாலும், ஐ.நா. சபை மற்றும் அமெரிக்காவின் ஆதரவினாலும், ஏனைய உலகநாடுகளின் கள்ள மவுனத்தினாலும், அரபு நாடுகளுக்கிடையே ஒற்றுமை இன்மை காரணமாகவும் இஸ்ரேல் இன்று விசுவரூபம் எடுத்திருக்கிறது.

சென்ற வருடம் இதே நாளில் ஹமாஸ் தனது நாட்டின் மீது நடத்திய தாக்குதலைச் சாக்காகச் கொண்டு இஸ்ரேல் இந்நாள் வரை 41,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் பலி வாங்கியிருக்கிறது. நேற்று லெபனான் மீதான தாக்குதலில் கூட 4,000-க்கும்மேற்பட்ட லெபனானியரைப் பலி கொண்டது மட்டுமல்லாமல், 12 லட்சம் லெபனானியர்களை அகதிகளாக்கி இருக்கிறது. இஸ்ரேலின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்த ஐ.நா. சபை செயலர் - தலைவர் அன்டோனியோ குத்தேரஸை தனது நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கும் அளவுக்கு விசுவரூபம் எடுத்துவிட்ட இஸ்ரேல், ஒரு உருள் பெருந்தேராக (juggernaut) தனது பாதையில் எதிர்ப்படும் அனைத்தையும் நிர்மூலமாக்கித் தனது ரத்தத் தடத்தைப் பதித்து வருகிறது.

வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் வெளிப்படையாக ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஈரானின் அணு ஆயத நிலையங்களைத் தகர்க்கும்படியும், பின் விளைவுகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பொறுப்பற்று பேசி வருகிறார்.

கமலா ஹாரிஸோ, தனது கணவர் ஒரு யூதர் என்ற காரணத்தால், மிதவாதப் போக்கைக் கடைபிடித்துவருகிறார். இருவரும் அமெரிக்காவின் முக்கிய வாக்கு வங்கிகளான யூதர்களையும், இஸ்லாமியர்களையும் குறி வைத்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தனது நிலையைத் தக்கவைப்பதற்காகவும், யூதர்களின் தாயகமான இஸ்ரேலைக் கருத்தாக்கம் மற்றும் செயலாக்கம் செய்து வெற்றிகண்ட ஸியோனிஸ்டுகள் (Zionists) - யூதமதகுருமார்கள் மற்றும் தீவிர வலதுசாரிகள் - கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும் பாலஸ்தீன மற்றும் அண்டை அரபு நாடுகளான லெபனான், சிரியா,ஈரான் இவற்றின் மீது தீவிர தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்டு வருகிறார்.

உளவியல் கூற்றின்படி, யாரொருவர் கடுமையான உளத்தாக்குதலுக்கு உள்ளாவாரோ, அவர் பிறர் மீது அதை விடக் கடுமையான உளத்தாக்குதலை நடத்துவார். இதை மெய்ப்பிக்கும் வகையில், சபிக்கப்பட்டு நாடற்ற அகதிகளாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த யூதஇனம், 2-ம் உலகப் போர் வரையிலும் சொல்லொணாத் துயரை அனுபவித்து இன்று உலக அரங்கில் தன்னை அனைத்துத் துறைகளிலும் பெரும் பங்களிப்பு செய்த இனமாக அடையாளப் படுத்தியிருக்கிறது. அத்தகையப் பெருமையை உடைய யூத இனத்தைச் சேர்ந்தஇஸ்ரேலின் பிரதமருக்கு, எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் இன அழிப்பைமேற்கொள்வது அவரது மனச்சாட்சிக்கு என்றும் உறுத்தலாகவே அமையும்.

ஆயிரக்கணக்கான மக்களைக் காவு கொண்டும், லட்சக்கணக்கான மக்களைப் புலம் பெயரச் செய்தும் தொடரும் இந்த யுத்தம் என்ற பெயரிலான இன அழித்தொழிப்பு, இனியேனும் முடிவுக்கு வர வேண்டும். அதற்கு உலக நாடுகள் தமது கள்ள மவுனத்தையும், தாம் அடையவிருக்கும் பலாபலன்களையும் விடுத்துஉலக அமைதி வேண்டியும், மானுட நேயத்தை கருத்தில் கொண்டும் தமது கூட்டு மனசாட்சியுடன் செயல்பட்டு உலக அமைதி நிலவ முயல வேண்டும்.

‘‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்று திருவள்ளுவர் “அன்புடைமை” அதிகாரத்தில் வலியுறுத்துகிறார். யாராவது இந்தக் குறளை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரது போதனையாளர்களுக்கும் செவியறிவுறுத்தினால் உலக நன்மை கோடி பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x