Published : 04 Oct 2024 11:37 AM
Last Updated : 04 Oct 2024 11:37 AM

ஜெஃப் பிசோஸை முந்திய மார்க் ஸூகர்பெர்க்: உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்

ஜெஃப் பிசோஸை, மார்க் ஸூகர்பெர்க்

நியூயார்க்: சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன் டாலர்களை நிகர சொத்து மதிப்பாக மார்க் ஸூகர்பெர்க் கொண்டுள்ளார். மெட்டாவின் ஏஐ சார்ந்த முதலீடுகள், நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது, செலவுகளை குறைக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் உள்ள எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் 256 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ளார். அவரை காட்டிலும் 50 பில்லியன் டாலர்கள் தான் மார்க் ஸூகர்பெர்க் பின்தங்கியுள்ளார். மூன்றாம் இடத்தில் உள்ள ஜெஃப் பிசோஸ் 205 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக கொண்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் மார்க் ஸூகர்பெர்கின் சொத்து மதிப்பு சுமார் 78 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. உலக அளவிலான 500 கோடீஸ்வரர்களில் நடப்பு ஆண்டில் அதிக வளர்ச்சி கண்டதும் அவர்தான் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 107 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 14-ம் இடத்திலும், 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 17-ம் இடத்திலும் உள்ளனர்.

டாப் 10 உலக கோடீஸ்வர்கள் பட்டியல்

  • எலான் மஸ்க் - 256 பில்லியன் டாலர்
  • மார்க் ஸூகர்பெர்க் - 206 பில்லியன் டாலர்
  • ஜெஃப் பிசோஸ் - 205 பில்லியன் டாலர்
  • பெர்னார்ட் அர்னால்ட் - 193 பில்லியன் டாலர்
  • லேரி எல்லிசன் - 179 பில்லியன் டாலர்
  • பில் கேட்ஸ் - 161 பில்லியன் டாலர்
  • லேரி பேஜ் - 150 பில்லியன் டாலர்
  • ஸ்டீவ் பால்மர் - 145 பில்லியன் டாலர்
  • வாரன் பஃபெட் - 143 பில்லியன் டாலர்
  • செர்ஜி பிரின் - 141 பில்லியன் டாலர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x