Published : 04 Oct 2024 03:57 AM
Last Updated : 04 Oct 2024 03:57 AM

லெபனான், காசா, ஏமன், சிரியா மீது குண்டுகளை வீசி இஸ்ரேல் பலமுனை தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின.படம்: பிடிஐ

டெல் அவிவ்: லெபனான், காசா, ஏமன், சிரியா மீது ஒரே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா பகுதி பிரதமர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-குவாசிர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்துகொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தீவிரவாத குழுக்களும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 27-ம் தேதி இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேபோல, ஏமன் நாட்டின் ஹவுத்தி தீவிரவாதிகள், இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை,ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டின் துறைமுகங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

சிரியாவின் ஷியா பிரிவை சேர்ந்த பல்வேறுதீவிரவாத குழுக்களும் இஸ்ரேலை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த குழுக்களுக்கு சிரியா அதிபர் ஆசாத், ஈரான் ராணுவம் முழு ஆதரவு அளிக்கிறது. இந்நிலையில், லெபனான், காசா, சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.எனினும், ஹமாஸ் தீவிரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸின் மூத்த தலைவர் ரவுகி முஸ்தாகா, திரைமறைவில் காசாவின் பிரதமராக செயல்பட்டு வந்தார். இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ரவுகி முஸ்தாகா உயிரிழந்தார். இதை இஸ்ரேல் ராணுவ தலைமை நேற்று உறுதி செய்தது.

ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல் குவாசிர், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பதுங்கி இருந்தார். அவர் தங்கியிருந்த கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் குண்டுகளை வீசின. இதில் ஹசன் ஜாபர் அல் குவாசிர் உயிரிழந்தார்.

ஏமன் நாட்டில் ஹவுத்தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹுதைதா துறைமுகம் மற்றும் 438 கி.மீ. நீளம் கொண்ட மரிப் ராஸ் இசா எண்ணெய் குழாய் கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த சில நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், துறைமுகம், எண்ணெய் குழாய்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது.

லெபனானின் பின்ட் ஜபால் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் 15 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும், லெபனானில் தரைவழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பாத்திமா கேட்பகுதி வழியாக தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். லெபனானின் 40 நகரங்களை சேர்ந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று 25 ஏவுகணைகளை வீசினர். அவற்றை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ‘‘ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 60 சதவீத ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 40 சதவீத ஆயுதங்களும் விரைவில் அழிக்கப்படும்’’ என்றுஇஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கூறினர். லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 4 நாட்களில் மட்டும் 300 பேர் உயிரிழந்தனர். போர் தீவிரமடையும் நிலையில் லெபனானில் வசிக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு மக்கள் உடனேவெளியேறுமாறு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஏற்கெனவே தங்கள் நாட்டு மக்களை லெபனானில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளன.

ஈரானில் மிகப் பெரிய தாக்குதல்? கடந்த 2-ம் தேதி இரவு இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் விமானப் படை தளங்களைகுறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசியது. அவற்றில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. ஈரானுக்கு பதிலடிகொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர்பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதன்படி, ஈரானின் 6 நகரங்களில் உள்ள அணு உலைகள், எண்ணெய் கிணறுகளை குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்திய நிலையில், ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து விரைவில் மிக பெரிய தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x