Published : 03 Oct 2024 02:50 PM
Last Updated : 03 Oct 2024 02:50 PM
பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் இரவு முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இலக்கில் ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவர் வசித்து வந்தார். மேலும், அந்த அமைப்புடன் இணைந்த மருத்துவ தலைமையகம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ரூட்டில் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது, லெபனான் மக்களை அச்சத்திலும் பரிதவிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்களின் கோட்டையான தாஹியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே லெபனானின் தெற்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் போது லெபனானில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கவலையும் பயமும் எங்கும் நிறைந்துள்ளன: மற்றுமொரு தூக்கமில்லாத இரவு என்று இந்தத் தாக்குதல்கள் குறித்து லெபனானுக்கான ஐ.நா.வின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பெய்ரூட்டில் மற்றுமொரு தூக்கமில்லாத இரவு. நகரத்தை எத்தனை தாக்குதல்கள் உலுக்கியுள்ளன என்று எண்ணப்பட்டு வருகிறது. எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படவில்லை. அடுத்து என்ன நிகழும் என்று தெரியாது. நிச்சயம் இல்லாத தன்மையே எங்களின் முன்னால் உள்ளது. கவலையும் பயமுமே எங்கும் நிறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கில் தாக்குதல்: லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேஸ் தாக்குதல் நடத்தியுள்ளதாக லெபனானின் அரசு தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் உள்ள தெற்கு டயர் மற்றும் பின்ட் ஜிபேய்ல் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசின. அதேபோல் மற்றொரு எல்லைப்புற மாவட்டமான நபாதியின் அர்நவுன் கிராமத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. லெபனானின் கிழக்கு பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பண்டோரா பெட்டியை திறந்துள்ளது: இந்தநிலையில், "மிகவும் கொந்தளிப்பான மற்றும் ஆபத்தான பகுதியில் இஸ்ரேல் ஒரு விரிவான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது பண்டோரா பெட்டியைத் திறந்துள்ளது. லெபனான் ஓர் அரசியல் ரீதியிலான தீர்வை விரும்புகிறது. ஆனால், இஸ்ரேலின் தலைக்கனம் கொண்ட தலைவர்கள் வேறு பாதையைத் தேர்ந்துடுத்துள்ளனர்" என்று இங்கிலாந்துக்கான லெபனான் தூதர் ராமி மோர்தடா சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லெபனான் 25 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது - ஐடிஎஃப்: லெபனானில் இருந்து எல்லை தாண்டி வந்த இரண்டு ஆளிலில்லா விமானங்கள் இன்று அடையாளம் காணப்பட்டு தடுத்தழிக்கப்பட்டது. லெபனானில் இருந்து 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. அவற்றில் சில தடுத்து அழிக்கப்பட்டன என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதிக விமானங்களை அனுப்பும் இங்கிலாந்து: லெபனானிலிருந்து இங்கிலாந்துக்கு வருவதற்கு வரையறுக்கப்பட்ட விமான சேவை வியாழக்கிழமை தொடங்கும். அங்கு பாதுகாப்பான சூழல் நிலவும் வரை இந்த விமானச் சேவைகள் தொடரும் என்று இங்கிலாந்தின் வெளிநாட்டு அலுவலகம் (எஃப்சிடிஒ) தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தில் வர விரும்பும் இங்கிலாந்தைச் சேராதவர்கள், இங்கிலாந்தில் குறைந்தபட்சம் 6 மாதம் தங்குவதற்கான விசா வைத்திருக்க வேண்டும். லெபனானில் இருந்து இங்கிலாந்துக்கு வருவதற்கு பதிவு செய்துள்ள இங்கிலாந்து குடிமக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் விமான சேவை குறித்த விபரங்கள் அனுப்பிவைக்கப்படும். இருக்கை உறுதியாகாத குடிமக்கள் வீணாக விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 150 இங்கிலாந்து குடிமக்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமை அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் பெய்ரூட்டில் இருந்து இங்கிலாந்து அழைத்து வரப்பட்டனர்.
பின்ட் ஜெபேலில் 15 ஹிஸ்புல்லாக்கள் சுட்டுக்கொலை - இஸ்ரேல்: இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறுகையில், "ஹிஸ்புல்லாக்கள் இயங்கி வந்த பின்ட் ஜெபேலின் நகராட்சி கட்டிடத்தின் மீது ஒரே இரவில் இஸ்ரேலின் போர் விமானங்கள் துல்லியமான தாக்குதல் நடத்தின. இந்தக் கட்டிடத்தில் ஹிஸ்புல்லாக்களின் பெரிய அளவிலான ஆயுதங்கள் சேமித்து வைப்பட்டிருந்தன. இந்தத் தாக்குதலின் ஒரு பகுதியாக குறைந்தது 15 ஹிஸ்புல்லாக்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது. மேலும், ஹிஸ்புல்லாகள் ஆயுதங்கள் சேமித்து வைத்திருந்த பகுதிகள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் உள்ளிட்ட 200 ஹிஸ்புல்லாக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
முற்றும் போர்ச் சூழல்: மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக போர்ச் சூழல் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT