Published : 03 Oct 2024 12:19 PM
Last Updated : 03 Oct 2024 12:19 PM
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அதன் முக்கிய தூதரக மறுசீரமைப்பு நடவடிக்கையாக இந்தியா உட்பட ஐந்து நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அந்த வெளியுறவு அமைச்சக அதிகாரி, "பெல்ஜியம், ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல், இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதர்கள் உடனடியாக டாக்காவுக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்." என்று தெரிவித்தார். பிரிட்டனுக்கான தூதர் சைதா முனா தஸ்னீம் திரும்ப அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான வங்கதேசத்தில் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வாரங்களாக நீடித்த வன்முறையின் முடிவில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறி ஆக.5-ம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நோபல் பரிசு பெற்றவரான முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்ததுள்ளது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக வங்க தேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்தியாவும் வங்கசேதமும் 4,000 கிலோ மீட்டர் தூர எல்லைகளையும், வங்காள விரிகுடாவில் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT