Published : 03 Oct 2024 04:12 AM
Last Updated : 03 Oct 2024 04:12 AM
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேலுக்கு முழு ஆதரவாக இருப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில்ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது.
கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இதனிடையே, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் 180 ஏவுகணைகளை வீசியது. அவற்றை எங்கள் நாட்டின் அயன் டோம் சாதனங்கள் இடைமறித்து அழித்தன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இதில் சிலர் காயமடைந்தனர்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரான் புரட்சிகர படை (ஐஆர்ஜிசி) வெளியிட்ட அறிக்கையில், “ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் எங்கள் தளபதி அபாஸ் நில்போரோஷான் ஆகிய இருவரையும் கொன்றதால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினோம். டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள 3 ராணுவதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். 90 சதவீத ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை தாக்கின" என தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “ஈரான் பெரிய தவறை செய்துள்ளது. இதற்கு அந்த நாடுபெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றார்.
எச்சரிக்கையை மீறி நடந்த இந்த தாக்குதலால் அமெரிக்கா ஆவேசம் அடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று கூறும்போது, “ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவுமாறு அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தேன். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக உள்ளது. தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என்றார்.
மேலும் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் லெபானானின் தெற்கு பகுதியில் 2-வது நாளாக நேற்றும் தரைவழி தாக்குதல் நடத்தியது. மேலும் கூடுதல் ராணுவவீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லெபனான் எல்லையில் உள்ள சுமார் 40 கிராம மக்கள்வெளியேற வேண்டும் என இஸ்ரேல்கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், 3 கேப்டன்கள் உட்பட 8 வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவையின்றி இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம். ஈரானில் தங்கியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்குள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, இந்திய தூதரகம் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்திய பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரானுக்குதக்க பதிலடி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடனும் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் அணு உலை தொடர்பான கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரம் சீரழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும்அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விரைவில் கொன்று விடுவோம் என ஈரான் உளவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே பிரான்ஸ், இஸ்ரேல்அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கிழக்குபகுதி நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT