Published : 02 Oct 2024 08:09 AM
Last Updated : 02 Oct 2024 08:09 AM
ஜெருசலேம்: இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசிய நிலையில், இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கி ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. உடனடியாக பொதுமக்களுக்கு சைரன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கி விட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சில “இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. இஸ்ரேலியர்கள் விழிப்புடன் இருக்கவும், அரசின் உத்தரவுகளை சரியான முறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் செய்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும், இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், ஏவுகணைகள் பலவற்றை இஸ்ரேல் விமானப்படை வழியிலேயே தாக்கி அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து வீழ்த்துமாறு அமெரிக்க ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கான பதிலடி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசிக்க இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முழு ஆதரவு இஸ்ரேலுக்கு உண்டு என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
#MISSILES LAUNCHED FROM ALL OVER WESTERN #Iran AT #ISRAEL. pic.twitter.com/pUqAD7BNyW
— Cheap Politics (@CheapPolitiks) October 1, 2024
ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அந்த நாடு கொடுக்கும். முன்னதாக யாஃபா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் தெஹ்ரானின் (ஈரான் தலைநகர்) தலையீடு இருக்கிறது. நம்மை தற்காத்துக் கொள்ளும் நம்முடைய உறுதியை ஈரான் புரிந்து கொள்ளவில்லை.
இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக் கணக்கான ஏவுகணைகளை வீசியுள்ளது. ஆனால் அவர்களின் இந்த தாக்குதல் தோல்வியடைந்து விட்டது. உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இஸ்ரேல் விமானப் படையால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதரவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லெபனான், காசா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தீய சக்திகளுடன் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய வீரர்கள் அங்கு தீவிரமாக களமாடி வருகின்றனர். முன்னெப்போதையும் விட அயத்துல்லாவின் இருண்ட ஆட்சிக்கு எதிராக உலக சமூகம் இஸ்ரேலுடன் ஒன்றிணைய வேண்டும்” இவ்வாறு நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பின்புலம் என்ன? - லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பு ஆகியவை ஈரானின் உறுதுணையுடன் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சூழலில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர். இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர போர் நடைபெற்றது. இதில் லெபனானில் 1,100 பேரும், இஸ்ரேலில் 165 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை 30-ம் தேதி இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் 2-ம் நிலை தலைவர் புவாட்ஷூகர் உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000-க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறின. கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா இயக்கத்தை முழுமையாக அழிக்கும் விதமாக, லெபனான் மீது நேரடியாக போர் தொடுக்க இஸ்ரேல் ராணுவம் முடிவு செய்தது. அதன்படி, தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருவதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்தது.
இதற்கிடையே, “லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பது காலத்தின் கட்டாயம். இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட கூடாது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதனை ஏற்க மறுத்த ஈரான் தற்போது இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...