Published : 28 Sep 2024 03:50 PM
Last Updated : 28 Sep 2024 03:50 PM

‘ஆசிர்வாதம்’, ‘சாபம்’ - இந்தியா, ஈரான் மேப்களை சுட்டிக் காட்டி நெதன்யாகு பேச்சு

நியூயார்க்: காசா போருக்கு பின்பு முதல்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என சுட்டிக்காட்ட முயன்றார். அப்போது அவர் தனது கைகளில் இரண்டு வரைபடங்களை வைத்திருந்தார். அந்த வரைபடங்களில் ஒரு சில நாடுகள் ‘சபிக்கப்பட்டவை’ என்றும், சில நாடுகள் ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இதில் சுவாரஸ்யமான விஷயமாக பாலஸ்தீன பகுதியான மேற்கு கரை மற்றும் காசா, இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வலது கையில் இருந்த நாடுகளின் வரைபடத்தில் ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் நாடுகள் இடம்பெற்றிருந்தன. அவைகள் கருப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டு ‘சபிக்கப்பட்டவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தன. இடது கையில் வைத்திருந்த வரைபடத்தில் எகிப்து, சூடான், சவுதி அரேபியா, மற்றும் இந்தியா இடம் பெற்றிருந்தன. அவை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டு, ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தன. சிரியாவின் கோலன் ஹைட்ஸ் பிராந்தியம் இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்தச் செயல் அண்டை அரபு நாடுகளுடன் அதன் வளர்ந்து வரும் உறவுகளை வலியுறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அக்.7-ம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ்கள் நடத்திய தாக்குதலை முதலில் கண்டித்த உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் முழுமையான போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வரும் இந்தியா, இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்களில் இரு நாடுகள் தீர்வினை வலியுறுத்தி வருகிறது.

லெபனானின் ஹிஸ்புல்லாக்களின் இலக்குகள் மீது இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியல் உலக நாடுகள் ஆசீர்வதிக்கப்பட்டது அல்லது சபிக்கப்பட்டது இரண்டுக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நெதன்யாகு தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

ஈரானுக்கு எச்சரிக்கை: தனது உரையில் நெதன்யாகு ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கூறுகையில், “நான் ஈரானுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன். நீங்கள் எங்களைத் தாக்கினால் நாங்களும் உங்களைத் தாக்குவோம். இஸ்ரேலின் நீண்ட கரம் செல்ல முடியாத இடம் என ஈரானில் ஒன்றுமே இல்லை. இது முழு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தும்.” என்றார்.

ஜுலை மாதம் ஹமாஸின் அரசியல் பிரிவுத்தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகரில் கொல்லப்பட்டதில் இருந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் வெளிப்படையான மோதல் அச்சுறுத்தல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பாலஸ்தீனமும் யூத வெறுப்பை நிறுத்திக்கொண்டு, இறுதியில் யூத அரசுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும் என்றும் நெதான்யாகு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x