Published : 28 Sep 2024 12:02 PM
Last Updated : 28 Sep 2024 12:02 PM

ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் பிரதமர் ஆதரவு

ஐநா பொதுச்சபையில் உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

ஐநா பொதுச்சபையில் வியாழன் (செப். 26) அன்று உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், “ஐநா பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல் காரணமாக அது முடக்கப்படக்கூடாது. ஐநா சீர்திருத்தப்பட வேண்டும். அதிக பிரதிநிதித்துவத்துடன், அதிகம் பதிலளிக்கக்கூடியதாக அது திகழ வேண்டும்.

நியாயமான விளைவுகளுக்கு மட்டுமல்ல, அவற்றை அடைவதில் நியாயமான பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் உருவாக்குவோம். ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இது பொருந்தும். அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக, அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்களாக வேண்டும். மேலும், ஆப்ரிக்காவின் பிரதிநிதித்துவமும் அதில் இருக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு அவை இவ்வாறு மாறுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.” என தெரிவித்தார்.

கடந்த ஜூலை பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்ர் ஸ்டார்மர், ஐநா பொது அவையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

முன்னதாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஐநா பொது அவையில் கடந்த புதன்கிழமை ( செப். 25) பேசும்போது, “ஐநா பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது. ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் பிரேசில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அத்துடன் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடுகளும் இதில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் வலியுறுத்தி இருந்தார். தற்போது ஐநா பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன. 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன. ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் இருப்பதால் அவை எந்தவொரு உறுதியான தீர்மானத்தையும் வீட்டோ செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x