Published : 28 Sep 2024 09:43 AM
Last Updated : 28 Sep 2024 09:43 AM
ஹில்புல்லா தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை கடுமையான தாக்குதலை நடத்தியது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் துவம்சம் செய்தது.
ஆனால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஹஜ் முகமது அஃபீஃப், “நஸ்ரல்லாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நஸ்ரல்லா இருப்பதாக நினைத்து இஸ்ரேல் குறிவைத்த இலக்கில் அவர் அப்போது இல்லை. ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.” எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தரப்பு இதனை மறுக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. இந்தத் தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகள் கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹிஸ்புல்லாக்கள் போர்ப் பாதையை தேர்வு செய்யும் வரை இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. எங்கள் நாட்டின் மீதான அச்சுறுத்தலை விலக்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.” என்று பேசியிருந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.
லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி 5 நாட்களில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 720-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 92 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காலையிலிருந்தே தாக்குதல்.. ஹிஸ்புல்லா கமாண்டர் நஸ்ரல்லாவைக் குறிவைத்து நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியதில் பலனடையாத இஸ்ரேல் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியே லெபனானில் 20-க்கும் மேற்பட்ட முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT