Published : 28 Sep 2024 04:38 AM
Last Updated : 28 Sep 2024 04:38 AM

யாழ்ப்பாணம் முன்னாள் ஆட்சியர் வடமாகாண ஆளுநராக நியமனம்: இலங்கை அதிபர் நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி

வேதநாயகத்திடம் வடமாகாண ஆளுநருக்கான நியமன ஆணையை வழங்கிய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க.

ராமேசுவரம்: அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய அதிபரின் இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம்ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள்சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.

கட்டாய விருப்ப ஓய்வு: நேர்மையான அரசுப் பணியாளராக அறியப்பட்ட வேதநாயகன், 2020 பிப்ரவரியில் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். பணி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் இருந்த நிலையில், ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக கட்டாய விருப்ப ஓய்வு பெறவைக்கப்பட்டார். இந்நிலையில், வேதநாயகனை வடமாகாண ஆளுநராக அதிபர் அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்தார். இது இலங்கை தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x