Published : 26 Sep 2024 06:14 PM
Last Updated : 26 Sep 2024 06:14 PM

‘வாய்ப்பே இல்லை...’ - லெபனான் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு

ஜெருசலேம்: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், “இது உண்மை இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக லெபனான் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது இஸ்ரேல். தற்போது, தரைவழி தாக்குதலும் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் சாரை சாரையாக லெபனான் தலைநகர் நோக்கி வெளியேறி வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையில், வழக்கம் போலவே `போர் நிறுத்தம் வேண்டும்’ என்ற கோரிக்கையை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. அதாவது, லெபனானில் 21 நாள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இஸ்ரேல் பிரதமர் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், "போர் நிறுத்தம் பற்றிய செய்தி உண்மையல்ல" என தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் லெபனானில் போர் நிறுத்தத்துக்கான முன்மொழிவுகளை நிராகரித்தார். அதாவது, லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 620-ஐ தாண்டியது. சுமார் 5,00,000 மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

போர்ச்சுகல், சீனா அரசாங்கம் தங்கள் நாட்டு மக்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று இன்று அறிவுறுத்தியுள்ளது. இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா நாட்டு மக்கள் உட்பட இந்த வாரம் லெபனானுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசுகள் முன்னரே தெரிவித்தன. அதோடு, கனடா, துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் லெபனானில் தங்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேல் ராணுவம் நடத்தியத் கொடூரத் தாக்குதலில், பல உடல்கள் அடையாளம்கூட காண முடியாத நிலையில் இருப்பதாகவும், இது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட கூடாது என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்தது காசா சுகாதார அமைச்சகம். லெபனான் பிரதமர் நஜிப் மிகாதி (Najib Mikati), இஸ்ரேல் - லெபனான் எல்லையில் 21 நாள் போர் நிறுத்தத்துக்கான சர்வதேச அழுத்தங்களை வரவேற்றுள்ளார்.

தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் இஸ்ரேல்: இதனிடையே, இஸ்ரேல் ராணுவத் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி வீரர்கள் மத்தியில் ஆற்றிய உரையில், “உங்கள் தலைகளுக்கு மேல் ஜெட் விமானங்கள் பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். நாம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறோம். இனி தரைவழித் தாக்குதலுக்கும் நாம் ஆயத்தமாக வேண்டும். ஹிஸ்புல்லாக்களை தொடர்ந்து பலவீனப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், “லெபனானில் போர் நடக்கக் கூடாது. இதற்காகத் தான் இஸ்ரேல் மேலும் முன்னேற வேண்டாம் நான் வலியுறுத்தினேன். ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. பொதுச் சபை உரைக்கு முன்னதாக மேக்ரான் அமெரிக்க அதிபர் பைடனுடன் இஸ்ரேல் - லெபனான் மோதல் பற்றி ஆலோசித்தார். அப்போது 21 நாட்கள் தற்காலிகமாக மோதலை நிறுத்தி அதிகரிக்கும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்ற யோசனையை பைடனிடம் அவர் முன்வைத்தார்.

ஏபிசி செய்தி நேர்காணலில் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “ஒரு முழு வீச்சுப் போருக்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில் இந்த மோதலைத் தடுக்க ஏதுவான சூழலும் இல்லாமல் இல்லை. ஒருவேளை அது நடந்தால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படும். ஒரு தீர்வுக்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

‘லெபனான் தாக்குதல் அபாயகரமானது’ - லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமானது என்று பத்திரிகையாளரும், போர் ஆய்வாளருமான ராமி கோரி தெரிவித்துள்ளார். இவர் லெபனானின் பெய்ரூட் நகரில் உள்ள ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறார். தற்போதைய இஸ்ரேல் - லெபனான் மோதல் குறித்து அவர், “இப்போது ஏற்பட்டுள்ள மோதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் அபாயகரமானது. இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையின் வேர் இதுவரை எப்போதுமே தீர்க்கப்பட்டதில்லை. கடந்த 30, 40, 50 ஆண்டுகளாகவே இந்த மோதல் நடக்கிறது.

ஆனால், இப்போதைய சூழலில் இந்த மோதல் பெரிய சக்திகளையும் போருக்குள் இழுப்பதாக அமையும். ஏற்கெனவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்கிறது. ஐ.நா. போன்ற சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலுக்கு முட்டுக் கொடுக்கிறது. இப்போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு மிகப் பெரிய அளவில் ராணுவ உதவிகளை அனுப்பியுள்ளது. இதனால் மொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் போர் மேகத்தில் சிக்கும் சூழல் உள்ளது. அதனால் இஸ்ரேல் - லெபனான் இடையேயான இப்போதைய மோதல் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய அச்சுறுத்தல். மிகப் பெரிய போர் ஏற்படலாம். அது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின் அடிப்படை ஒருமைப்பாட்டையே அந்தப் போர் அசைத்துப் பார்க்கக் கூடும்” என எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x