Published : 25 Sep 2024 12:55 PM
Last Updated : 25 Sep 2024 12:55 PM

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு

அநுர குமார திசாநாயக்க | ஹரிணி அமரசூரிய

ராமேசுவரம்: இலங்கையில் நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடைய 10 மாதங்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றக் கொண்ட அநுர குமார திசாநாயக்க, நேற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்தினார்.

அரசியல் குடும்பப் பின்னணியற்ற தெற்காசியாவின் முதல் பெண் பிரதமராக அவர் பதவியேற்றுள்ளது பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற பதவிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4-ம் தேதி துவங்கி அக்டோபர் 11-ம் தேதி வரை நடைபெறும். தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21-ல் கூடும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்களும், மாற்றங்களும்; முன்னதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அநுர குமார திசாநாயக்க முந்தைய இலங்கைய அரசாங்கங்களில் புரையோடியிருந்த ஊழல், வீண் விரயம், மோசடி முறைகேடுகளுக்கு எதிரான புதிய சட்டங்கள் உள்ளிட்ட 23 உடனடி மாற்றங்களை அமல்படுத்துவேன், என அறிவித்திருந்தார்.

ஆனால், இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை 225-ல் பெரும்பான்மையை நிரூபிக்க 113 இடங்கள் வேண்டும். தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் வேண்டும். மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு வழங்கக் கூடிய வேறெந்த கட்சியும் இலங்கை நாடாளுமன்றத்தில் கிடையாது.

இதனால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்த சூழலில் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க தான் அறிவித்த அதிரடி சட்டங்களை அமல்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அநுர குமார திசாநாயக்க உத்திரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இலங்கை நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராது இயங்கி வந்த தேசிய மக்கள் சக்தி கட்சி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்றும், கூடுதல் பலத்துடன் இலங்கையில் ஆட்சியை அநுர குமார திசாநயாகக்க தொடரவே விரும்புவார். இதற்காக தமிழர்கள், முஸ்லிம்கள், மலையக மக்கள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகளையும் ஒருங்கிணைத்து தேசிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை கைப்பற்ற முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்கட்சித் தலைவரான சஜித பிரேமதாச, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்படப்போவதில்லை. என அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கக்கூடிய கூட்டணியில் இணையப்போவதில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மட்ட அரசியல் நடவடிக்கைகளையும் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x