Published : 25 Sep 2024 04:05 AM
Last Updated : 25 Sep 2024 04:05 AM
நியூயார்க்: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மீண்டும் அவரை சந்தித்து பேசினார். விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலையில் ரஷ்யா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. பொதுச் சபை கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 22-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இரு நாடுகள் இடையிலான பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக பைடனுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் சந்தித்தார். அப்போது ஜெலன்ஸ்கியிடம் மோடி, ‘‘ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இந்த சந்திப்புகள் ஆக்கப்பூர்வமாக உள்ளன. விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் அமைதி முயற்சிக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்தார்.
நியூயார்க்கில் இந்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, ‘‘ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். அக்டோபர் 22 முதல் 24-ம் தேதி வரை ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கூறியபோது, ‘‘ரஷ்யா, உக்ரைன், அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண இந்திய பிரதமர் மோடியும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.
வியட்நாம் அதிபருடன் சந்திப்பு: அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்து வருகிறார். அந்த வகையில், நியூயார்க்கில் வியட்நாம் அதிபர் டோ லாமை, மோடி சந்தித்தார். அப்போது ‘யாகி’ புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த அவர், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இருநாட்டு உறவுகள், இந்திய, பசிபிக் பிராந்தியம் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தினார். அர்மீனியா பிரதமர் நிகோலையும் மோடி சந்தித்தார். இந்தியாவிடம் இருந்து ஆகாஷ் ஏவுகணைகள், ஆயுதங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றை அர்மீனியா வாங்கி வருகிறது. இதுகுறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். அர்மீனியாவுக்கு தேவையான ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று மோடி உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT