Published : 25 Sep 2024 04:09 AM
Last Updated : 25 Sep 2024 04:09 AM

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்: அதிபர் முன்னிலையில் பதவியேற்றார்

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட ஹரிணி அமரசூரிய.

ராமேசுவரம்: இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, நாட்டின் 9-வது அதிபராக கடந்த 23-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், புதிய அரசு அமைவதற்கு ஏற்ப, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச் சரவையும் பதவி விலகியது. இதைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய (54), இடைக்கால பிரதமராக நியமிக்கப்படுவதாக அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார். அதிபர் முன்னிலையில் ஹரிணி அமரசூரிய நேற்று பதவியேற்றார்.

இலங்கையின் 16-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஹரிணி அமரசூரியவுக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், சுகாதாரம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் ஆகிய 3 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

சிரிமாவோ பண்டார நாயக்க கடந்த 1960-ல் இலங்கை பிரதமரானார். இலங்கையின் முதல் பெண் பிரதமர் என்பது மட்டுமின்றி, உலகின் முதல் பெண் பிரதமரான பெருமையும் அவருக்கு உண்டு. அவரைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு அவரது மகள் சந்திரிகா குமாரதுங்க சிறிது காலம் பிரதமர் பதவியில் இருந்தார். பின்னர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சந்திரிகா குமாரதுங்க அதிபர் ஆனதை தொடர்ந்து, அவரது தாய் சிரிமாவோ பண்டாரநாயகே 1994 முதல் 2000-ம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் இருந்தார். 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு பெண், பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் மூத்த தலைவரான ஹரிணி அமரசூரிய, கல்வியாளர், மனித உரிமை ஆர்வலரும்கூட. கடந்த 2019 அதிபர் தேர்தல், 2020 நாடாளுமன்ற தேர்தல், தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தல் ஆகியவற்றில் அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஹரிணி அமரசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே கூறப்பட்டது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாதபடி கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x