Published : 24 Sep 2024 08:06 PM
Last Updated : 24 Sep 2024 08:06 PM
வாஷிங்டன்: காசா போர் நிறுத்த நடவடிக்கை குறித்தும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் எல்லைப் பிரச்சினை பதற்றத்தை தணிப்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியாக இருப்பதாக, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் அமெரிக்க அதிபர் ஜோ டைபன் உரையாற்றுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சல்லிவன் அளித்த பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சல்லிவன் கூறுகையில், "அவர் (ஜோ பைடன்) முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இருவரையும் ஒரு புள்ளியில் ஒன்றிணைப்பதில் உள்ள சிக்கலை அவர் உணர்ந்திருக்கிறார். சின்வார் ஒரு ஒப்பந்தத்துக்கு வர விரும்பவில்லை என்றாலும், நாங்கள் (அமெரிக்கா) போர் நிறுத்தத்தில் உறுதியாக இருக்கிறோம். காசாவில் போர் நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கில் ஒரு முழுமையான போரை தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் கூடியுள்ள உலக நாடுகளின் தலைவர்களுடன் பைடனும் இணைந்துள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லாக்களுடன் கனன்று கொண்டிருந்த மோதல், அக்டோபர் 7-ம் தேதிக்கு பின்னர் தீவிரமடைந்தது. அது தற்போது மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ஆனால், முந்தைய விஷயங்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். இஸ்ரேல், லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வடக்கு எல்லையில் போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கும். மக்களை பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு இன்னும் ஒரு பாதையை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
லெபனானை விட்டு வெளியேற அமெரிக்கர்களுக்கு அறிவுரை: இதனிடையே, இஸ்ரேல் - லெபனான் எல்லையில், இன்னும் தாக்குதல் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், விமான போக்குவரத்து இயக்கத்தில் இருக்கும் நிலையிலேயே லெபனானில் இருக்கும் அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "லெபனானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுவதற்கு இன்னும் விமான சேவைகள் இருக்கிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விமான சேவைகள் கிடைக்கும் இந்த வேளையிலேயே அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியே அறிவுறுத்துகிறோம். அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலில் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்" என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர். இதனை லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் உறுதி செய்துள்ளார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT