Published : 24 Sep 2024 03:53 AM
Last Updated : 24 Sep 2024 03:53 AM
கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டார். ‘‘சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். நாம் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்’’ என்று தெரிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறுகிறது. இதன்படி, வேட்பாளர் பட்டியலில் இருந்து 3 பேரை வாக்காளர்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு வாக்காளரும் 1, 2, 3 என முன்னுரிமை அளித்து 3 வேட்பாளர் களுக்கு வாக்களிப்பார்கள். இதில் வாக்காளர் குறிப்பிடும் முதல் வேட்பாளர் முன்னுரிமை பெற்றவர் ஆவார். 50 சதவீதத்துக்கு மேல் 1-ம் எண் வாக்குகள் (முதல் முன்னுரிமை) பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் 75% வாக்குகள் பதிவாகின. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க 42% வாக்குகளையும், ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச 32% வாக்கு களையும் பெற்றனர். யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால் இலங்கை வரலாற்றில் முதல்முறையாக, 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2 மற்றும் 3-வது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், அநுர குமார திசாநாயக்க 55.87% வாக்குகளை பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சஜித் பிரேமதாசவுக்கு 44.13 % வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் நேற்று காலை பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபராக பதவியேற்றதும் பேசிய அநுர குமார திசாநாயக்க, ‘‘பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது அவசியம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். நாம் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்’’ என்று தெரிவித்தார்.
புதிய அதிபர் பதவியேற்ற நிலையில், இலங்கை நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும். இதன்பிறகு உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டம் தம்புதேகம கிராமத்தில் கடந்த 1968 நவம்பர் 24-ம் தேதி பிறந்தவர் அநுர குமார திசாநாயக்க. சிறுவயது முதலே இடதுசாரி கொள்கையில் பற்று கொண்டிருந்தார் திசா நாயக்க. 1987-ம் ஆண்டில் இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) கட்சியில் இணைந்தார். கடந்த 2014-ல் அக்கட்சி தலைவர் ஆனார்.
ஜேவிபி கட்சி கடந்த 2019-ல் தேசிய மக்கள் சக்தி என்று பெயர் மாற்றப்பட்டது. அந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க போட்டியிட்டார். அப்போது அவருக்கு 3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தற்போது 55% வாக்குகள் பெற்று அதிபராகி உள்ளார். முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் மீதான மக்களின் அதிருப்திதான் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீன ஆதரவு நிலையையே திசாநாயக்க தொடர்ந்து எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலம் முதலே இந்தியாவை ஜேவிபி கட்சி கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த 1980-ல் இந்தியா சார்பில் இலங்கைக்கு அமைதிப் படை அனுப்பப்பட்டது. இதற்கும் ஜேவிபி கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த 2019-ல் தேசிய மக்கள் சக்தி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் இருந்து, இந்தியா தொடர்பான அந்த கட்சியின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
கடந்த பிப்ரவரியில் அநுர குமார திசாநாயக்க டெல்லிக்கு வந்தபோது, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது, ‘‘இந்தியா, இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடாக விளங்குகிறது. இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இலங்கையின் பொருளாதார, அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்’’ என்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துள்: இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கான முன்னுரிமை கொள்கையில் இலங்கைக்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களின் முன்னேற்றம், பிராந்திய முன்னேற்றத்துக்கு உங்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்து அதிபர் அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மோடியின் அன்பான வார்த்தைகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி. இரு நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் உங்களது உறுதிப்பாட்டை நானும் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் பிராந்தியத்தின் நலனுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT