Published : 23 Sep 2024 05:02 PM
Last Updated : 23 Sep 2024 05:02 PM
கொழும்பு: “நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் புதிய அதிபர் அநுரா குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுரா குமார திசாநாயக்க-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் கடல்சார் தொலைநோக்கு ஆகியவற்றில் இலங்கை உயர் முன்னுரிமை இடத்தைக் கொண்டுள்ளது. நமது மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக நமது பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்த உங்களுடன் விரிவாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு அநுரா குமார திசாநாயக்க நன்றி தெரிவித்து பதில் பதிவு இட்டுள்ளார். அதில் “உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் வெற்றியை அடுத்து அநுரா குமார திசாநாயக்கவை, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து இலங்கைக்கான இந்திய தூரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரா குமார திசாநாயக்கவுக்கு இந்திய தலைவர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. நாகரிக இரட்டையர்களான இந்தியாவும் இலங்கையும் நமது இரு நாட்டு மக்களின் செழுமைக்காக உறவுகளை மேலும் ஆழப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயக்க-வுக்கு காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுரா குமார திசாநாயக்க-வுக்கு வாழ்த்துகள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுரா குமார திசாநாயக்க-வுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் இலங்கையும் பல நூற்றாண்டுகள் பழமையான பன்முக ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. நமது பிராந்தியத்தின் நலனுக்காக நமது உறவுகளையும் பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகளையும் வலுப்படுத்த இந்திய மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT