Published : 23 Sep 2024 04:44 AM
Last Updated : 23 Sep 2024 04:44 AM

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் அதிகரிப்பு: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு அமெரிக்கா உத்தரவு

பெய்ரூட்: கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நசரல்லாவின் வலதுகரமாக செயல்பட் புவத் ஷுக்கர் கொல்லப்பட்டதை தொடர்ந்து லெபனான் நாட்டுக்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படையின் தளபதி இப்ராஹிம் அக்கீல் மற்றும் அஹமது வாபி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில்தான், தனது குடிமக்களை லெபனான் நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து சேவை இன்னும் அமலில் உள்ள நிலையில் அதனை பயன்படுத்தி உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போருக்குப் பிறகு பெய்ரூட்டில் நடத்தப்பட் மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதலில் 37உயிரிழந்ததாக லெபனான் சுகாதார துறை அமைச்சர் பிராஸ் அபைது தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் சனிக்கிழமை இரவு இஸ்ரேலின் ஜெஸ்ரீ பள்ளத்தாக்கின் வடக்கு நகரங்கள் மீது10 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தாக்குதலில் 60 வயது முதியவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை தாக்குதல்: மோதல் தீவிரமானதிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி ஹிஸ்புல்லாக்கள் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஹிஸ்புல்லா ராமட் டேவிட் விமானப் படைத் தளத்தைகுறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். இது, லெபனான் எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்ரேலிய விமானப் படைக்கு சொந்தமான மிக முக்கியமான விமான படை தளமாகும். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும்விதமாக, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் லெபனான் முழுவதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. சுமார் 300 ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x