Published : 23 Sep 2024 04:25 AM
Last Updated : 23 Sep 2024 04:25 AM

தேசங்களை இணைக்கும் பிணைப்பை கொண்டாடுவோம் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பற்றி பிரதமர் பெருமிதம்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு தனித்த, சிறப்பான இடம் கிடைத்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து டெலவரில்அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடி அங்கு நடந்த குவாட் கூட்டமைப்பில் பங்கேற்று உரையாற்றினார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பில் பல்வேறு தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வில்மிங்டன் நகரத்தில் இந்த குவாட் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான இங்கு இந்தமாநாட்டை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். குவாட் கூட்டமைப்பு தொடங்கியதும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக இந்திய வம்சாவளியிருடனான சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது பெருமையான விஷயம். அமெரிக்காவில் நமது வம்சாவளியினர் தனித்த இடத்தைப் பெற்றுள்ளனர். இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது. பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சமூகம் தன்னை வேறுபடுத்தி காண்பித்து வருகிறது. இன்று இந்திய வம்சாவளியினருடனான மிக பிரமாண்டமான சந்திப்பு நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. நமது தேசங்களை இணைக்கும் பிணைப்பை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு அவர் அதில்தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் உற்சாகம்: பிரதமர் மோடிக்கு அளித்த உற்சாக வரவேற்பில் கலந்துகொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, "பிரதமர் மோடியைப் போலஉயிரைக் கொடுத்து, இந்தியா மதிக்கப்படுவதையும், நேசிக்கப்படுவதையும் உறுதிசெய்த அரசியல்வாதிகள் வேறு யாரும்இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை அவர் முன்னேற்றம் அடையச் செய்துள்ளார். உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டுவந்துள்ளார். டெலவர் மாகாணத்துக்கு அவரை வரவேற்பதில் நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன்" என்றார். மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கூறும்போது, “நான் பிரதமருடன் கைகுலுக்கினேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்தியாவை மீண்டும் பொற்காலத்துக்கு அழைத்து வந்துள்ளார் மோடி. இது ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த தருணம்" என்றார்.

பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசளித்த மோடி: அமெரிக்காவின் டெலவர் மாகாணம், வில்மிங்டனில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்தார். அப்போது அவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கலைநயமிக்க ரயிலை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மகாராஷ்டிராவை சேர்ந்த கைவினைக் கலைஞர்களின் கலைத்திறனில் உருவான வெள்ளி ரயிலை அதிபர் பைடன் வியந்து பாராட்டினார். இந்த ரயிலில், 'டெல்லி- டெலவர்' என்று பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.
அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பஸ்மினா சால்வையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

இது காஷ்மீரில் தயாரிக்கப்படும் கம்பளி ஆடை ஆகும். இந்த கம்பளி, லடாக் பகுதியை சேர்ந்த சாங்தேங்கி அல்லது பஸ்மினா ஆடு இனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. பின் னர் தாவரங்கள் மற்றும் தாதுக்களில் இருந்து எடுக்கப்படும் இயற்கையான சாயங்கள் தோய்க் கப்பட்டு பஸ்மினா சால்வை தயாரிக்கப்படுகிறது. காஷ்மீர் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய பஸ்மினா சால்வையை ஜில் பைடன் வியந்து பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x