Published : 23 Sep 2024 03:55 AM
Last Updated : 23 Sep 2024 03:55 AM

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு: பிரதமர் மோடியிடம் ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி, டெலவர் மாநிலம் வில்மிங்டன் நகரில் சந்தித்து பேசினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அதிபர் பைடன் முழு ஆதரவு தெரிவித்தார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள்அடங்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்த ஆண்டில் இந்தியாவில் நடக்க இருந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால் உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்க அரசு விருப்பம் தெரிவித்தது.

அதன்படி, அமெரிக்காவின் டெலவர் மாநிலத்தில் உள்ள பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரில் குவாட் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர்ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி,ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோர் பங்கேற்றனர்.

உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: மனிதகுல நன்மைக்காகவும், ஜனநாயகத்தை காக்கவும் கூட்டமைப்பின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து செயல்படும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் கிடையாது. அதேநேரம், அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகளை கடைபிடிக்க வேண்டும். மற்ற நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும். அனைத்து பிரச்சினைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். குறிப்பாக, இந்தியபெருங்கடல், பசிபிக் பெருங்கடலில் சுதந்திரமான கடல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும். அடுத்த ஆண்டு குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும். இவ்வாறு மோடி பேசினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்பேசும்போது, ‘‘பசிபிக் பிராந்தியத்தில் சீனா அத்துமீறி செயல்படுகிறது. எங்களது பொறுமையை சீனா சோதிக்கிறது’’ என்றார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ பேசும்போது, ‘‘சர்வதேச விதிகளை சில நாடுகள் (சீனா) மதிப்பது இல்லை. இந்த சூழலில் பசிபிக் பெருங்கடலில் சுதந்திரமான போக்குவரத்தை உறுதிசெய்ய குவாட் உறுதியேற்றுள்ளது’’ என்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசும்போது, ‘‘வளமான இந்திய, பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க குவாட் கூட்டமைப்பின் 4 நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்’’ என்றார். மாநாட்டின் நிறைவாக, 4 தலைவர்களும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, பிரதமர் மோடியை அதிபர் பைடன் தனது அருகே நிற்கவைத்து, அவரதுதோளில் நட்புணர்வுடன் கைவைத்து அரவணைத்துக் கொண்டார். மாநாட்டின் ஒரு பகுதியாக, வில்மிங்டனில் உள்ள பைடனின் வீட்டில் அவரை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவையும் இணைக்க வேண்டும்என்று மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதுபற்றியும் அவர்கள் விவாதித்தனர். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அதிபர் பைடன் முழு ஆதரவு தெரிவித்தார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்தார். பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, பருவநிலை மாறுபாடு, மரபுசாரா எரிசக்தி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

குவாட் கூட்டமைப்பு சார்பில், கருப்பை புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டெலவரில் நடந்தது. இதில் பைடன் பேசும்போது, ‘‘இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் ஆண்டுதோறும் 1.50 லட்சம் பெண்கள் கருப்பை புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும்’’ என்றார். பிரதமர் மோடி பேசும்போது, ‘‘இந்திய, பசிபிக் நாடுகளுக்கு ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ திட்டத்தின்கீழ் 7.5 மில்லியன் டாலர் மதிப்பிலான புற்றுநோய் கண்டறியும் கருவிகள், மருந்துகள் வழங்கப்படும். 4 கோடி தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.

எதிரி இலக்கை தாக்கும் ட்ரோன்கள் வாங்க ஒப்பந்தம்: அமெரிக்காவிடம் இருந்து 31 ஹன்டர் - கில்லர் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த ட்ரோன்கள் 50,000 அடி உயரத்தில், தொடர்ச்சியாக 40 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. மணிக்கு 442 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,700 கிலோ வெடிகுண்டுகளை ட்ரோனில் சுமந்து செல்ல முடியும். லேசர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் 4 ஏவுகணைகள் ட்ரோனில் பொருத்தப்பட்டிருக்கும். இவை எதிரிகளின் இலக்கை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். இந்தியா - அமெரிக்கா இடையே இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. அமெரிக்காசார்பில் கொல்கத்தாவில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆலோசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x