Published : 22 Sep 2024 08:10 PM
Last Updated : 22 Sep 2024 08:10 PM

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி!

அநுர குமார திசாநாயக்க

கொழும்பு: தீவு தேசமான இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சனிக்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் சுமார் 42.31 சதவீத வாக்குகளை அநுர குமார திசாநாயக்க பெற்றுள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். ரணில் விக்ரம சிங்க மூன்றாம் இடம் பிடித்தார்.

55 வயதான அநுர குமார திசாநாயக்க, நாளை (திங்கட்கிழமை) இலங்கை அதிபராக பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கபப்டுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருந்தார். இருப்பினும் முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறவில்லை. அதனால் இரண்டாம் முறையாக வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதல் வாக்கு எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் மட்டுமே இரண்டாவது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அதிக வாக்குகளை பெற்று அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார்.

இலங்கை தேர்தல்: இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. வாக்குரிமை பெற்ற 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி) செலவிடப்பட்டது. 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் தொங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x