Published : 22 Sep 2024 07:26 PM
Last Updated : 22 Sep 2024 07:26 PM
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு கொராசன் பிராந்தியத்தில் உள்ள சுரங்கத்தில் எரிவாயு வெடித்து நடந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.
விபத்து நடந்த பகுதியில் இயங்கி வரும் மாதன்ஜோ நிறுவனத்தால் நடத்தப்படும் சுரங்கத்தில் உள்ள பி மற்றும் சி பிளாக்குகளில் மீத்தேன் வாயு வெடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து குறித்து தெற்கு கொராசன் பிராந்தியத்தின் கவர்னர் அலி அக்பர் ரஹிமி கூறுகையில், "நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி பயன்பாட்டில் 76 சதவீதம் இந்தப்பகுதியில் இருந்தே பெறப்படுகிறது. இங்கு மதான்ஜு நிறுவனம் உட்பட 8 முதல் 10 பெரிய நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.
பி பிளாக்கில் மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. அங்கு பணியில் இருந்த 47 பணியாளர்களில் 30 பேர் உயிரிழந்து விட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். சி பிளாக்கில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் மீத்தேன் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் மீட்புப் பணிகள் நிறைவடைவதற்கு அதிக நேரம் எடுக்கும்" என்று தெரிவித்தார். விபத்து நடப்பதற்கு முன்பு அங்கு 69 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானின் ரெட் கிரசண்ட் தலைவர் கூறுகையில், "காயமடைந்த 17 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 24 பேர் காணாமல் போய் உள்ளனர்" என்று ஞாயிற்றுக்கிழமையின் முற்பகுதியில் தெரிவித்திருந்தார். இந்த வெடி விபத்து சனிக்கிழமை இரவு 9 மணிக்கு நடந்துள்ளது.
விபத்து குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியன் கூறுகையில், "வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமைச்சர்களுடன் பேசினேன். தொடர்ந்து எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT